ஆசிரியர்களுக்கு பொதுத்தேர்வு பணிகள்: கல்வித்துறை தீர்ப்பு
ஆசிரியர்களுக்கு பொதுத்தேர்வு பணிகள்: கல்வித்துறை தீர்ப்பு
UPDATED : பிப் 29, 2024 12:00 AM
ADDED : பிப் 29, 2024 09:17 AM
மதுரை:
மதுரையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு பணிகள் ஒதுக்கீட்டில் தேர்வுத்துறை வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கையை அடுத்து கல்வி ஒன்றியத்திற்குள் மட்டுமே பணிகள் ஒதுக்கப்படும் என கல்வித்துறை முடிவு செய்துள்ளது.அடுத்தமாதம் முதல் பிளஸ் 2 தேர்வு துவங்குகிறது. தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணிகள் ஒதுக்கீட்டில் சீனியாரிட்டி பின்பற்ற வேண்டும். தொலைதுார தேர்வு மையத்தில் பணி ஒதுக்கக்கூடாது. ஆசிரியர்கள் குடியிருக்கும் வீட்டில் இருந்து 8 கி.மீ.,க்குள் உள்ள மையங்களுக்கு பணி ஒதுக்க வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் போர்க்கொடி எழுப்பப்பட்டது.ஆனால் கல்வித்துறை சார்பில் தேர்வுத்துறை வழிகாட்டுதல்படி ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளியில் இருந்து 8 கி.மீ.,க்குள் உள்ள மையங்களில் தான் பணிகள் ஒதுக்கப்படும் என &'கறார்&' காட்டப்பட்டது. மேலும் ஆசிரியர்கள் தரப்பில் மாவட்டத்தின் நோடல் அலுவலரான தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜமுருகனிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது. அவரது ஆலோசனைப்படி சில மாற்றங்களுடன் தேர்வுப் பணி ஒதுக்கீட்டை கல்வித்துறை நிறைவு செய்துள்ளது.சி.இ.ஓ., கார்த்திகா கூறியதாவது:
மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 35,263 மாணவர்கள் 111 மையங்களில் எழுதவுள்ளனர். இதற்கான விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வுப் பணிகளில் தலைமையாசிரியர் உட்பட 2700 பேருக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்று இயக்குநர் ஆலோசனைபடி சில மாற்றங்கள் செய்யப்பட்டன.இதன்படி பள்ளியில் இருந்து 8 கி.மீ., துாரம் என்ற அடிப்படையில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒருதரப்பு ஆசிரியர் வசிக்கும் வீடுகளில் இருந்து 8 கி.மீ., துாரம் உள்ள மையங்களை கேட்கின்றனர். இரண்டில் எந்த ஒன்றை பின்பற்றினாலும் ஒரு தரப்பு ஆசிரியர்கள் பாதிப்பதாக சர்ச்சை எழுகிறது. இதனால் தேர்வுத்துறை வழிகாட்டுதல் பின்பற்றப்பட்டுள்ளது.கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வு முறைகேடு வழக்கில் தொடர்பில்லாதவர்களுக்கு தான் இந்தாண்டு பணி வழங்கப்பட்டுள்ளது. இந்த முறை சி.இ.ஓ., அளவில் தான் தேர்வுப் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்வுப் பணியில் தவறு நடந்தால் சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

