பள்ளி விடுதியில் மின் கசிவு 3 மாணவர்களுக்கு தீக்காயம்
பள்ளி விடுதியில் மின் கசிவு 3 மாணவர்களுக்கு தீக்காயம்
UPDATED : பிப் 29, 2024 12:00 AM
ADDED : பிப் 29, 2024 10:19 PM
விஜயபுரா:
விஜயபுராவில் மொரார்ஜி தேசாய் உறைவிடப்பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று மாணவர்கள் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விஜயபுரா மாவட்டம், முத்தேபிகல் தாலுகாவில் கிருஷ்ணா நதிக்கரை அருகில் கலபுஜி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பு, மொரார்ஜி தேசாய் உறைவிடப் பள்ளி விடுதி கட்டப்பட்டது.தற்போது இந்த விடுதியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, 18 மாணவர்கள் தங்கியிருந்த அறையில் தீப்பிடித்தது. மாணவர்கள், கூச்சலிட்டனர். இதைக் கேட்டு, பக்கத்து அறையில் இருந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள், விடுதி வார்டன் ஆகியோர், மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.படுகாயமடைந்த 6ம் வகுப்பு மாணவர் சாகர், பி.எல்.டி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இரு மாணவர்கள் லேசான தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பத்தாம் வகுப்பு மாணவர்கள் உடனடியாக தீயை அணைத்ததால், பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. விடுதி திறக்கப்பட்டு ஆறு மாதங்களில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு உள்ளதால், பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.தாலுகா சமூக நலத்துறை உதவி இயக்குனர் உமேஷ் லமானி, விடுதிக்கு வந்து ஆய்வு செய்தார். மாவட்ட சமூக நலத்துறை அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.

