கல்வித்துறை கூட்டத்தில் பங்கேற்காத துணைவேந்தர்களுக்கு சம்பளம் கட்
கல்வித்துறை கூட்டத்தில் பங்கேற்காத துணைவேந்தர்களுக்கு சம்பளம் கட்
UPDATED : மார் 02, 2024 12:00 AM
ADDED : மார் 03, 2024 08:27 AM
பாட்னா:
பீஹாரில் கல்வித் துறை சார்பில் நடந்த மறு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்காத பல்கலைகளின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட துணை வேந்தர்களின் சம்பளமும் மாநில அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.பீஹாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மாநில கல்வித் துறை சார்பில் பல்கலைகளில் நிலுவையில் உள்ள தேர்வு உள்ளிட்ட பிரச்னை குறித்த விவாதிப்பதற்கான மறு ஆய்வு கூட்டம் சமீபத்தில் நடந்தது.இதில் மாநில அரசின் கீழ் செயல்படும் அனைத்து பல்கலை துணைவேந்தர்களும் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இருப்பினும், இந்த கூட்டத்தில் காமேஸ்வர் சிங் தர்பங்கா சமஸ்கிருத பல்கலை தவிர, வேறு எந்த பல்கலை துணைவேந்தர்களும் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்காத பல்கலை துணைவேந்தர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இது குறித்து அனைத்து பல்கலை கட்டுப்பட்டாளர்களுக்கு மாநில கல்வித் துறை செயலர் பைத்யநாத் யாதவ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்படுவதாவது:
நிலுவையில் உள்ள தேர்வுகள் மற்றும் பல்வேறு பிரச்னைகள் குறித்த நடத்தப்பட்ட கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து துணைவேந்தர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். இரண்டு நாட்களுக்குள் திருப்திகரமான பதில் கிடைக்காவிட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.மறு உத்தரவு வரும் வரை கூட்டத்தில் பங்கேற்காத பல்கலைகளின் எந்த கணக்குகளையும் இயக்க வேண்டாம் என, சம்பந்தப்பட்ட வங்கிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன. துணை வேந்தர்களின் சம்பளமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

