பவள விழாவில் அடியெடுத்து வைத்த பாலமந்திர் காமராஜர் அறக்கட்டளை
பவள விழாவில் அடியெடுத்து வைத்த பாலமந்திர் காமராஜர் அறக்கட்டளை
UPDATED : மார் 04, 2024 12:00 AM
ADDED : மார் 04, 2024 08:40 AM
தி.நகர்:
பாலமந்திர் காமராஜர் அறக்கட்டளை, வரும் 10ம் தேதி 75ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது.தேனாம்பேட்டை மண்டலம், ஜி.என்.,செட்டி சாலையில், பாலமந்திர் காமராஜ் அறக்கட்டளையின், சத்தியமூர்த்தி உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளிகள் உள்ளன. பள்ளி எதிரே, பாலமந்திர் குழந்தைகள் காப்பகம், பாலமந்திர் வித்யாலயா மழலையர் தொடக்கப்பள்ளி, பகல் நேர குழந்தைகள் காப்பகம் மற்றும் தொழில் பயிற்சி மையம் உள்ளன.கடந்த 1949ல் காங்கிரஸ் கட்சி மைதானத்தில் துவக்கப்பட்டது தான், பாலமந்திர் காமராஜர் அறக்கட்டளையின் பாலமந்திர் இல்லம். ஆதரவற்ற இரு குழந்தைகளுக்காக, காமராஜரால் துவக்கப்பட்டது.அதன்பின், ஏராளமான குழந்தைகள் இந்த இல்லத்தில் சேர்ந்தனர். குழந்தைகள் வளர வளர, அவர்களுக்கான தேவையை கருத்தில் வைத்து கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டன. வேலைவாய்ப்பு வரை அவர்களுக்கு வழிவகை செய்யப்பட்டது. இதையடுத்து, ஐந்து கிளைகளாக விரிவடைந்தது.இங்கு சேரும் குழந்தைகளின் ஜாதி, மதம், பாலினம் என, எந்த கேள்வியும் கேட்காமல், வறுமையை மட்டுமே தகுதியாக கருதி அடைக்கலம் தருகின்றனர். அதேநேரம், அங்குள்ள குழந்தைகளை தத்தெடுக்க விரும்பும் வெளிநாட்டு, உள்நாட்டினரின் நோக்கத்தை ஆராய்ந்து தத்தெடுப்புக்கும், 1965 முதல் வழிவகை செய்தது. தற்போது, உள்நாட்டினருக்கு மட்டுமே அந்த வசதி வழங்கப்படுகிறது.மேலும், நலிவுற்ற மக்களுக்கு மருத்துவ வசதியை தரும் வகையில், பிசியோதெரபி, ஹோமியோபதி, கண் பராமரிப்பு, குழந்தை பராமரிப்பு கிளினிக்குகள் துவக்கப்பட்டன. 1990ல் ஆதரவற்ற பெண்களுக்கான இல்லம் உருவாக்கப்பட்டது. எல்லையில்லா சேவைகளால், 1999ல் பொன் விழாவை கொண்டாடியது.கடந்த 2015ல் அப்பகுதியை வெள்ளம் சூழ்ந்த நிலையில், கொடையாளர்களின் உதவியுடன் மெல்ல மீண்டு, தன் கட்டமைப்பை, முன்பை விட பலமடங்கு உறுதியாக்கியது. அதேபோல, கொரோனா காலகட்டத்தையும் வென்று கம்பீர நடைபோடுகிறது.நாகர்கோவில்இதேபோல, நாகர்கோவிலில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற பெண் குழந்தைகளை பராமரித்து, கல்வி புகட்டுகிறது அடுத்த கிளை. இப்படி, தன் சேவையால் தலைநிமிர்ந்து 75ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது, பாலமந்திர் காமராஜர் அறக்கட்டளை. மனம் உள்ளோர் வாழ்த்துவோம். வசதியுடையோர் கொடையளிப்போம்.

