மாமல்லையில் நுழைவுச்சீட்டு மையம் தொல்லியல் துறையினர் அமைப்பு
மாமல்லையில் நுழைவுச்சீட்டு மையம் தொல்லியல் துறையினர் அமைப்பு
UPDATED : மார் 06, 2024 12:00 AM
ADDED : மார் 06, 2024 09:11 AM
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை காண, தொல்லியல் துறை நுழைவுக் கட்டணம் வசூலிக்கிறது.கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், வெண்ணெய் உருண்டை பாறை ஆகிய பகுதிகளில், ஏதேனும் ஓரிடத்தில் பெறும் நுழைவுச்சீட்டு பயன்படுத்தி, அனைத்து சிற்பங்களையும் காணலாம். கலங்கரைவிளக்கம் அருகில் குன்றில் உள்ள மகிஷாசுரமர்த்தினி, உலகனேஸ்வரர் உள்ளிட்ட குடைவரைகள் பகுதிக்கு, நுழைவுச்சீட்டு மையம் இல்லை.வேறிடத்தில் நுழைவுச்சீட்டு வாங்கி வருவோர், அங்கு செல்ல சிக்கல் இல்லை. வேறிடம் செல்லாமல், நேரடியாக அங்கு வரும் சுற்றுலா பயணியர், நுழைவுச்சீட்டு வாங்குவதற்காகவே வேறு பகுதிக்கு செல்ல, ஊழியர்களால் கட்டாயப்படுத்துகின்றனர்.அவ்வாறு செல்வதை தவிர்க்க, அங்குள்ள கியூ.ஆர்., குறியீடு வாயிலாக, கைபேசியில் இணையச்சீட்டு பதிவிறக்கி காண்பிக்குமாறும் கூறுகின்றனர். இணைய வழிமுறை அறிந்தவர்கள், சாலையில் திரண்டு நின்று, விபத்து அபாய சூழலில், கியூ.ஆர்., குறியீடை ஸ்கேன் செய்கின்றனர். அவர்களால் போக்குவரத்தும் தடைபடுகிறது.அதுபற்றி அறியாதவர்கள், சற்று தொலைவில் உள்ள ஐந்து ரதங்கள் மையம் சென்று, நுழைவுச் சீட்டு வாங்கி வர வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க, மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவில் பகுதியிலும் நுழைவுச்சீட்டு மையம் ஏற்படுத்துமாறு, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.தற்போது, அப்பகுதியில் நுழைவுச் சீட்டு மையம் ஏற்படுத்த, தொல்லியல் துறை சார்பில் கன்டெய்னர் பூத் அமைக்கப்பட்டுள்ளது. வெண்ணெய் உருண்டை பாறை பகுதி மையத்தின் பழைய பூத்திற்கு மாற்றாக, புதிய பூத் அமைக்கப்பட்டுள்ளது.

