இந்திய கலாசாரம் வியப்பில் ஆழ்த்துகிறது! இத்தாலி பெண் நெகிழ்ச்சி
இந்திய கலாசாரம் வியப்பில் ஆழ்த்துகிறது! இத்தாலி பெண் நெகிழ்ச்சி
UPDATED : மார் 06, 2024 12:00 AM
ADDED : மார் 06, 2024 09:39 AM
திருப்பூர்:
இந்திய கலாசாரம், பண்பாடு, உபசரிப்பு முறைகள் வியப்பாக இருக்கிறது; எங்களை வெகுவாக கவர்ந்துள்ளது என நிட்-டெக் கண்காட்சியில் பங்கேற்ற, இத்தாலி பெண் தொழில் முனைவோர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.திருப்பூர் அருகேயுள்ள திருமுருகன்பூண்டியில், நிட்-டெக் பின்னலாடை இயந்திரவியல் கண்காட்சி நடந்து வருகிறது. கண்காட்சியில், அமெரிக்கா, இத்தாலி, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த, இயந்திரம் உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.காம்பாக்டிங் இயந்திரங்களை வடிவமைக்கும், இத்தாலியை சேர்ந்த சின்டெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மரியா, நிர்வாக அலுவலர் அன்னா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். முதல் நாள், ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்து, இத்தாலி பெண்களாக இருந்தவர்கள், நேற்று தமிழக பாரம்பரியப்படி சேலை அணிந்து, நெற்றியில் விபூதி, குங்குமத்துடன் காணப்பட்டனர்.பரபரப்பான வர்த்தக விசாரிப்புக்கு மத்தியிலும், வணக்கம் என்று கூறி வரவேற்ற மரியா, இந்திய கலாசாரத்தை கேள்விப்பட்டிருக்கிறோம்; இங்குள்ள பெண்களை பார்த்து, சேலை உடுத்தியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பேச துவங்கினார்.தந்தை ஆண்டனியோ பெனாசுவ், எங்கள் நிறுவனத்தின் சேர்மன்; இருப்பினும், இத்தாலியை தாண்டி அவர் வெளியே செல்வதில்லை. நானும், சகோதரரும் வெளிநாட்டு வர்த்தகத்தை கவனிக்கிறோம். முதன்முறையாக, இந்தியா வந்து, நிட் -டெக் கண்காட்சியில் பங்கேற்றுள்ளேன்.இங்குள்ள, எங்களது டீலர் வீட்டுக்கு சென்ற போது, குவளையில் தண்ணீர் கொடுத்து வரவேற்று, பெண்கள் கனிவுடன் உபசரித்தனர்; உணவு முறை பிரமாதமாக இருக்கிறது. உலகம் முழுவதும் வர்த்தக ரீதியாக சுற்றி வருகிறோம். இருப்பினும், இந்தியாவை போல் வேறு எங்கும் வரவேற்பும், உபசரிப்பும் இருப்பதில்லை. குறிப்பாக, தமிழக மக்கள் சகோதர, சகோதரிகளை போல் நெருங்கி பழகுகின்றனர்.நாங்கள் சேலை அணிய முடியுமா? என்று நண்பரிடம் கேட்டோம்; உடனே, புதிய சேலை வாங்கி கொடுத்தனர். அவர்களது வீட்டுப்பெண்கள் சேலை உடுத்த கற்றுக்கொடுத்தனர். வர்த்தக உறவுமுறைகளை தாண்டி, இந்திய கலாசாரம், பண்பாடு, உபசரிப்பு வியப்பாக இருக்கிறது; எங்களை வெகுவாக கவர்ந்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

