புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் சுருங்கியது! ரூ.620 கோடியில் மட்டுமே பணி இறுதி
புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் சுருங்கியது! ரூ.620 கோடியில் மட்டுமே பணி இறுதி
UPDATED : மார் 07, 2024 12:00 AM
ADDED : மார் 07, 2024 09:30 AM
புதுச்சேரி:
இந்தியாவில் குறிப்பிட்ட நகரங்களை தேர்வு செய்து அங்கு அனைத்து வசதிகளையும் மேம்படுத்தி ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்கும் திட்டம் மத்திய அரசால் 2015-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.இத்திட்டத்தில் மூன்றாம் கட்டத்தில் புதுச்சேரிக்கு ஸ்மார்ட் சிட்டியை உருவாக்க மத்திய அரசு கடந்த 2017ல் அனுமதி கொடுத்தது. இதன்படி புதுச்சேரி நகர பகுதியில் 1468 ஏக்கர் பரப்பளவில் திட்ட மதிப்பீடு 1,828 கோடி ரூபாயில் பணிகள் நடக்க வேண்டும்.குறிப்பாக தடையில்லா மின்சாரம், சுத்தமான குடிநீர், கழிவுநீர் பாதாள சாக்கடை வழியாக செல்லுதல், குப்பையில்லா நகரம், மின்விளக்குகளால் ஒளிர செய்தல், கண்காணிப்பு கேமரா, நடைபாதை மேம்பாடு பணிகள் தான் இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம்.புதுச்சேரியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிற மாநிலங்களின் நகரங்கள் இலக்குகளை நிறைவு செய்யும் நோக்கில் நெருங்கி வருகின்றன.அந்த மாநிலங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் படுவேகத்தில் அரங்கேறி இருக்க , புதுச்சேரியில் மட்டும், படு மந்தமாக நடந்து வருகின்றது.ஸ்மார்ட் சிட்டி காலக்கெடு வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ள சூழலில் திட்டங்களை செயல்படுத்துவதில் புதுச்சேரி மிகவும் பின் தங்கி உள்ளது.ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டு நிறுவன வாரியத்தின் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல திட்டங்களில், பெரும்பாலான திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை.சரியான திட்டமிடல் இல்லாததால், டெண்டர் பிரச்னை,இட பிரச்னைகளால் தான் ஸ்மார்ட் சிட்டியின் பணிகள் தாமதமாகி விட்டன.நிதிகுறைப்பு
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடைசியாக புதுச்சேரி அரசு 1048 கோடி ரூபாய் அளவிற்கு திட்டப் பணிகளை அனுப்பி இருந்தது.ஆனால் யூனியன் பிரதேசங்களுக்கு 930 கோடிக்குள்ளாக திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியது.இதன் காரணமாக நீண்ட காலமாக நடக்க இருந்த திட்டங்களை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் கைவிட்ட சூழ்நிலையில் இப்போது பெரிய மார்க்கெட் உள்பட பல்வேறு திட்டங்களை கைவிட்டு,இறுதியாக 620 கோடி ரூபாய் மட்டுமே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை இறுதி செய்யப்பட்டுள்ளது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பொருத்தவரை தற்போது மத்திய மாநில அரசுகளின் பங்களிப்பாக 320 கோடி ரூபாய் கொடுத்துள்ளன.இதில் 280 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.40 கோடி ரூபாய் மீதமுள்ளது.குமரகுரு பள்ளம் உள்பட ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு பாக்கிதொகை கொடுத்தால் கையில் உள்ள தொகையும் விரைவில் செலவாகிவிடும்.ஸ்தம்பிக்கும்
மத்திய அரசு தனது பங்களிப்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு 196 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில் புதுச்சேரி அரசு 120 கோடி ரூபாய் ஒதுக்கியது.மீதி 76 கோடி ரூபாய் தர வேண்டும்.இதுமட்டுமின்றி புதிதாக புதுச்சேரி அரசு பங்களிப்பு தொகை தர வேண்டும்.அதன் பிறகு தான் மத்திய அரசும் பங்களிப்பு தொகை தரும்.லோக்சபா தேர்தல் விரைவில் வர உள்ள சூழ்நிலையில் புதிய ஆட்சி அமைந்து,அதன் பிறகு தான் மத்திய அரசு பங்களிப்பு தொகை தரும்.எனவே அடுத்த மூன்று மாதங்களுக்கான புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு போதுமான நிதி இருந்தால் மட்டுமே பணிகள் நடக்கும்.இல்லையெனில் நிதி பங்களிப்பில் சிக்கல் எழுந்து அனைத்து பணிகளும் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கவர்னர்,முதல்வர், புதிய தலைமை செயலர் இவ்விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி,மத்திய அரசினை அணுகி நிதி பெற வேண்டும்.மாநில அரசும் தனது பங்களிப்பு தொகை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

