UPDATED : மார் 09, 2024 12:00 AM
ADDED : மார் 09, 2024 03:45 PM
புதுடில்லி:
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில், நான்கு ஆண்டுகளுக்குப் பின், மாணவர் சங்கத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான தேர்தல் குழு நேற்று அறிவிக்கப்பட்டது.டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் சங்கத் தேர்தல் 2019ல் நடந்தது. கடந்த 2020ல் கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்தல் அறிவிக்கப்படவில்லை. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் தேர்தல் நடத்தப்படவில்லை.அதே நேரத்தில் டில்லி பல்கலையில் கடந்த ஆண்டு மாணவர் சங்கத் தேர்தல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜே.என்.யூ.,விலும் தேர்தல் நடத்த மாணவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், 42 மாணவர்கள் அடங்கிய தேர்தல் குழு நேற்று அறிவிக்கப்பட்டது. இந்தக் குழுவினர் தேர்தல் தேதி, ஓட்டு எண்ணிக்கை உள்ளிட்ட தேர்தல் பணிகளைக் கவனிப்பர் என கூறப்பட்டுள்ளது.கடந்த, 2019ல் நடந்த தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ., தலைமையிலான ஐக்கிய முன்னணி அமைப்பு வெற்றி பெற்றது. ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., எனப்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தோல்வி அடைந்தது.

