கடல்சார் பல்லுயிர்களை பாதுகாக்க மரைன் எலைட் போர்ஸ் துவக்கம்
கடல்சார் பல்லுயிர்களை பாதுகாக்க மரைன் எலைட் போர்ஸ் துவக்கம்
UPDATED : மார் 09, 2024 12:00 AM
ADDED : மார் 09, 2024 03:48 PM
சென்னை:
கடல் சார்ந்த பல்லுயிர்களையும், பவளப் பாறைகளையும் பாதுகாக்க, மரைன் எலைட் போர்ஸ் எனப்படும் கடல்சார் உயர் இலக்கு படை, தமிழகத்தில் முதன் முதலாக நேற்று துவக்கப்பட்டது.மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி பகுதியில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, கடல்சார் உயர் இலக்கு படையை, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று தலைமை செயலகத்தில் இருந்து, வீடியோ கான்பரன்ஸ் வழியே துவக்கி வைத்தார்.அறிமுகம்
பின் அவர் அளித்த பேட்டி:
கடல்சார் உயர் இலக்கு படை என்ற அமைப்பை, முதல்வர் முன்னுதாரண திட்டமாக, முதல் முறையாக நம் மாநிலத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார். இந்த அமைப்பில், 12 பேர் இடம் பெறுவர். மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி பகுதியில் சுற்றுச்சூழல், பல்லுயிர்களை பாதுகாக்க, இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் துவக்கி உள்ளோம்.அவர்கள் பணி செய்வதற்காக, இரண்டு படகுகள் மற்றும் ஒயர்லெஸ் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. கடற்கரையில் இருக்கும் பல்லுயிர்கள், தாவரங்கள், பவளப்பாறைகள், கடற்பசுக்கள், கடல் குதிரை, அவுலியா, கடல் புற்கள் என எண்ணற்ற பல்லுயிர்களை பாதுகாக்க, இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதன் வழியே பல்லுயிர்கள் பாதுகாக்கப்படும்; அவை சார்ந்த குற்றங்கள் தடுத்து நிறுத்தப்படும்.செயல்பாடு
வனத்துறை சார்பில் இந்த அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகளை பொறுத்து, மற்ற கடற்கரை மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுஉள்ளோம். திராவிட மாடல் ஆட்சியில் மனிதர்கள் மட்டுமின்றி, புலிகள், யானைகளும் நலமாக உள்ளன. இவ்வாறு மதிவேந்தன் கூறினார்.

