UPDATED : மார் 11, 2024 12:00 AM
ADDED : மார் 11, 2024 09:55 AM
சிவகங்கை:
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரியில் செவிலியர் மாணவிகளுக்கு விடுதி இருந்தும் கல்லுாரி தொடங்காத காரணத்தால் பயனற்று கிடக்கிறது.சிவகங்கை மாவட்டத்தில் அரசு செவிலியர் கல்லுாரிகள் இல்லை. மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறை உள்ளது. மருத்துவக் கல்லுாரியுடன் செவிலியர் கல்லுாரி இருந்தால் அந்த மாணவர்கள் மூலம் வார்டுகளில் நோயாளிகளைக் கவனிக்க முடியும்.சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி தொடங்கியபோதே பிஎஸ்சி அல்லது டிப்ளமோ நர்சிங் கல்லுாரி தொடங்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்தது. மருத்துவக் கல்லுாரி கட்டடங்கள் கட்டும்போதே செவிலியர் மாணவிகள் தங்க விடுதி இங்கு கட்டப்பட்டுள்ளது.மருத்துவக் கல்லுாரி தொடங்கி 12 ஆண்டுகளாகியும் இதுவரை செவிலியர் கல்லுாரி தொடங்கப்படவில்லை. தற்போது பாரா மெடிக்கல் படிப்புகளில் லேப் டெக்னீசியன், பிஎஸ்சி ரோடியோலாஜி, தியேட்டர் டெக்னீசியன் உள்ளிட்ட 5 படிப்பு மட்டுமே அரசு மருத்துவக் கல்லுாரியில் உள்ளது.மருத்துவர் ஒருவர் கூறுகையில், சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 300க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்ளனர். இருந்தபோதிலும், நோயாளிகளைக் கவனிப்பதில் சிரமம் உள்ளது.நர்சிங் கல்லுாரி இருந்தால் பயிற்சி மாணவர்கள் உதவியாக இருப்பர். 17 வகையான பாரா மெடிக்கல் படிப்புகள் உள்ளது. இதில் 5 மட்டுமே இங்கு உள்ளது. பாரா மெடிக்கலில் டிப்ளமோ பார்மசி கொண்டுவந்தால் மருத்துவக் கல்லுாரிக்கு கூடுதல் உதவியாக இருக்கும் என்றார்.மருத்துவக் கண்காணிப்பாளர் குமரவேல் கூறுகையில், விடுதியில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் தங்கியுள்ளனர். செவிலியர் கல்லுாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விடுதி பயன்பாட்டில் தான் இருக்கிறது என்றார்.