UPDATED : மார் 12, 2024 12:00 AM
ADDED : மார் 12, 2024 09:22 AM
மொழிப்பாட தேர்வுகள் கொஞ்சம் ஈஸியா தான் இருந்துச்சுங்க. அப்படி ஒண்ணும் கஷ்டம் இல்ல&' இப்படியாக சில ஆசிரியர்கள் கூற, அப்பாடா என, நிம்மதி பெருமூச்சுவிட்டனர் பெற்றோர்.அப்படியெல்லாம் ஈஸின்னு சொல்ல முடியாது; ரொம்ப கஷ்டமா தான் கேட்டிருந்தாங்க. அதுவும், தமிழ் பாடம் ரொம்ப கஷ்டம்; இங்கிலீஷ் சப்ஜெக்டில், வெளியில இருந்தெல்லாம் கேள்விக் கேட்டிருந்தாங்க. சுமாரா படிக்கிற பசங்க நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான் என, மற்றொரு தரப்பு ஆசிரியர்கள் கூற, அய்யய்யோ.. என, அதிர்ச்சியில் சில நிமிடம் மூச்சடைத்தனர் பெற்றோர்.நடந்து வரும், 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில் மொழிப்பாட தேர்வுகள், எப்படி இருந்தது? இந்த கேள்விக்கு தெளிவாக விடை சொல்ல முடியாமல் ஆசிரியர்களே திணறியதும், தங்களுக்குள் முரண்பட்டுக் கொண்டதையும் பார்க்க முடிந்தது.கல்வியாளர்கள் சிலர் கூறியதாவது:கல்வி போதிப்பு என்பதும், மாணவர்கள் படிப்பது என்பதும் இன்று கடினமான ஒன்றாக மாறிவிட்டது. தேர்வு சமயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட மாணவர்களை வரச் செய்து, ஆசிரியர்கள் சிறப்பு வகுப்பு நடத்துகின்றனர்.முன்பெல்லாம், தேர்வுக்கு எதுமாதிரியான கேள்விகள் கட்டாயம் வரும் என்பதை, அனுபவத்தின் வாயிலாக அறிந்திருந்த ஆசிரியர்கள், அந்த கேள்விகளுக்கு முன்னுரிமை கொடுத்து, படிக்க சொல்வார்கள். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் கல்வி போதிப்பு முறை ஆசிரியர்களுக்கு குழப்பம் நிறைந்தாக மாறியிருக்கிறதா, என சந்தேகிக்க வைக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.