தனியார் பள்ளிகளுக்கு அரசு ரூபாய் 1,000 கோடி பாக்கி
தனியார் பள்ளிகளுக்கு அரசு ரூபாய் 1,000 கோடி பாக்கி
UPDATED : மார் 12, 2024 12:00 AM
ADDED : மார் 13, 2024 09:17 AM
சென்னை:
மத்திய, மாநில அரசுகளின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, சிறுபான்மை அங்கீகாரம் அல்லாத தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில் எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில், கல்வி கட்டணமின்றி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.நுழைவு நிலை வகுப்பில் சேரும் இந்த மாணவர்களுக்கு, எட்டாம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை, தமிழக அரசே செலுத்தும். இந்த நிதி ஒவ்வொரு கல்வி ஆண்டும் முடிந்த பின், பள்ளிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும்.இந்நிலையில், 2022 - 23 மற்றும் 2023 - 24ம் கல்வி ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு, தமிழக அரசு வழங்க வேண்டிய கல்வி கட்டண தொகையில், 1,000 கோடி ரூபாய் பாக்கி உள்ளதாக தனியார் பள்ளிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.இது குறித்து, தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பான, பெப்சா சார்பில், அதன் மாநில தலைவர் ஆறுமுகம், பள்ளிக்கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு:கட்டாய கல்வி சட்டத்தில், அரசின் சார்பிலான இலவச சேர்க்கைக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.இந்நிலையில், இந்த திட்டத்தில் மாணவர்களை சேர்த்த பள்ளிகளுக்கு, இரண்டு கல்வி ஆண்டுகளுக்கான கல்வி கட்டணமான, 1,000 கோடி ரூபாய் பாக்கியை, தமிழக அரசு விரைந்து வழங்க வேண்டும்.அவ்வாறு வழங்காவிட்டால், வரும் கல்வி ஆண்டுக்கான சேர்க்கையை மேற்கொள்வது குறித்து, அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகளும், மறுபரிசீலனை செய்து தான் முடிவெடுக்கும் நிலையில் உள்ளன. இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.