ஒற்றை சாளர முறை சேர்க்கை: கலை அறிவியல் பாடங்களுக்கு சாத்தியமா?
ஒற்றை சாளர முறை சேர்க்கை: கலை அறிவியல் பாடங்களுக்கு சாத்தியமா?
UPDATED : மார் 12, 2024 12:00 AM
ADDED : மார் 13, 2024 09:22 AM
கோவை:
அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் எதிர்வரும் ஆண்டு முதல் ஒற்றை சாளர முறையில் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டு, விரிவான ஆய்வு மேற்கொள்ள சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.உயர்கல்வி சேர்க்கை செயல்பாடுகளுக்கு மூன்று மாதங்களே உள்ள சூழலில், 2024-25 கல்வியாண்டில் இதை செயல்படுத்துவது சாத்தியமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. பொறியியல் போன்று,கலை, அறிவியல் கல்லுாரிகளிலும் ஒற்றை சாளர முறையில் சேர்க்கை நடத்தவேண்டும் என்பது பல ஆண்டு கோரிக்கையாக உள்ளது.இந்நிலையில், அரசு கல்லுாரிகளில், விண்ணப்பம் பெற்று தரப்பட்டியல் வெளியிடும் செயல்பாடுகள் மட்டும், ஒற்றை சாளர முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. எதிர்வரும் கல்வியாண்டில், அரசு, அரசு உதவிபெறும் கல்லுாரிகளில் ஒற்றை சாளர முறை சேர்க்கைக்கான செயல்பாடுகள் துவக்கியுள்ளது பல்வேறு தரப்பில் வரவேற்பை பெற்றுள்ளது.அதே சமயம், பிளஸ் 2 தேர்வுகள் துவங்கிவிட்டன. உயர்கல்வி சேர்க்கைக்கு மிகவும் குறுகியகாலமே உள்ள சூழலில், இச்செயல்பாடுகள் தாமதமாக துவங்கியுள்ளதாக தெரிகிறது. பொறியியல், மருத்துவம், சட்டம் போன்ற பாடப்பிரிவுகளில் துறைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு; மேலும், ஒவ்வொரு பிரிவுக்கும் குறிப்பிட்ட கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளன.ஆனால், கலை அறிவியல் கல்லுாரிகளில் பாடப்பிரிவுகள் என்பது மிகவும் அதிகம் என்பதாலும், பி.காம்., பிரிவுகளுக்கு ஒரு மாதிரியும், பி.எஸ்.சி., பிரிவுகளுக்கு ஒரு மாதிரி என கல்வித்தகுதிகள் வேறுபட்டுள்ளன. இதனால், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் எழும் என ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.உதாரணமாக, அரசு கலை கல்லுாரிகளில் கடந்த ஆண்டு ஒற்றைசாளர முறையில் விண்ணப்பம் பெற்று, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது அதன் படி கல்லுாரிகளை தேர்வு செய்த இரண்டு மாணவிகள் சேர்ந்த பின் இலவச விடுதி வசதி இல்லாமல் திரும்ப செல்லும் நிலை ஏற்பட்டது.மேலும், தரவரிசை படி ஒரு மாணவன் குறிப்பிட்ட பாடப்பிரிவுக்கு தகுதி பெற்று சேர்க்கைக்கு வந்த போது, அப்பாடத்தில் சேர அம்மாணவனுக்கு பாடங்கள் சார்ந்த கல்விதகுதி இல்லை என்ற சிக்கல் எழுந்தன.இதுகுறித்து, கல்லுாரி முதல்வர் ஒருவர் கூறுகையில் கலை, அறிவியல் பிரிவுகளை பொறுத்தவரையில், 147 விதமான துறைகள் உள்ளன. ஒரு சிலவற்றுக்கு பிளஸ் 2 முடித்து இருந்தால் போதும், ஆங்கில பாடத்திற்கு ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண் முதலில் கணக்கிடப்படும், சில பாடப்பிரிவுக்கு கணிதம் கட்டாயம், சிலவற்றுக்கு வணிகவியல் தேவை அதுபோன்று பல வேறுபாடுகள் உள்ளன. மேலும், கலை அறிவியல் கல்லுாரிகளில் சேர்க்கை முதலில் நடப்பதால் சேர்க்கை புரிந்தவர்கள் பொறியியல், மருத்துவம் கல்லுாரிகளுக்கு சென்றுவிடுவார்கள். இதுபோன்ற அனைத்து பிரச்னைகளையும் ஆராய்ந்து பிரத்யேக சாப்ட்வேர் உருவாக்கவேண்டும். குறைந்தபட்சம் ஓராண்டுகள் இதற்கு எடுத்துக்கொள்ளவேண்டும். ஆனால், 6ம் தேதி கூட்டம் நடத்தி ஒரு குழு அமைத்து அக்குழு, 13ம் தேதிக்குள் அறிக்கை கொடுக்க கூறப்பட்டுள்ளது.மிகவும் அவசியமான இத்திட்டத்தை அவசரகதியில் செயல்படுத்தாமல், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து பரிசோதித்து நடைமுறைப்படுத்தவேண்டும், என்றார்.