ராஷ்ட்ரிய ரக் ஷா பல்கலை: மாணவர் சேர்க்கை அறிவிப்பு
ராஷ்ட்ரிய ரக் ஷா பல்கலை: மாணவர் சேர்க்கை அறிவிப்பு
UPDATED : மார் 13, 2024 12:00 AM
ADDED : மார் 13, 2024 09:41 AM
சென்னை:
நாட்டின் உள்பாதுகாப்பு, போலீஸ் நிர்வாகம் போன்றவற்றை மேம்படுத்தும் வகையில், ராஷ்ட்ரிய ரக் ஷா பல்கலை என்ற, தேசிய பாதுகாப்பு பல்கலை குஜராத்தில் செயல்படுகிறது.உள்நாட்டு பாதுகாப்பு
உள்நாட்டு பாதுகாப்பு துறைகளில் ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்கும், இந்நிறுவனத்தின் படிப்புகளில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, பல்கலையின் மதிப்பீட்டு மற்றும் அங்கீகார குழு இயக்குனர் மனோஜ் பட், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் போலீஸ் நிர்வாக கல்லுாரி இயக்குனர் தீபக் மெஹ்ரா ஆகியோர் கூறியதாவது:
பார்லிமென்ட் சட்டப்படி, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனமாக, இந்த பல்கலை செயல்படுகிறது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில், குஜராத்தை தலைமையிடமாக கொண்டு இப்பல்கலை இயங்குகிறது.குஜராத் தலைமையிட வளாகத்தில் மட்டும், 1,200 மாணவர்கள் ஆண்டுதோறும் பட்டம் பெறுகின்றனர். அருணாசல பிரதேசம், உத்தர பிரதேசம், கர்நாடகா மற்றும் புதுச்சேரியிலும், எங்கள் பல்கலை இயங்குகிறது.படிப்புகள்
இங்கு, உள்நாட்டு பாதுகாப்பு குறித்த இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், இளநிலை மற்றும் முதுநிலை டிப்ளமா, சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன.குறிப்பாக, கிரிமினாலஜி, போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன், சைபர் செக்யூரிட்டி, கோஸ்டல் செக்யூரிட்டி, டிஜிட்டல் போரன்சிக், பேரிடர் மேலாண்மை, கார்ப்பரேட் நுண்ணறிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் நடத்தப்படுகின்றன.பி.டெக்., படிப்புகளில் சேருவதற்கு மட்டும், ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மற்ற படிப்புகளில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படுகிறது.புதுச்சேரி வளாகத்தில், பி.ஏ., மற்றும் எம்.ஏ., கிரிமினாலஜி, சைபர் செக்யூரிட்டியில் முதுநிலை டிப்ளமா என, ஐந்து படிப்புகள் நடத்தப்படுகின்றன. விரிவான விபரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

