பழங்குடியின மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பு: மாலை அணிவித்து வரவேற்பு
பழங்குடியின மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பு: மாலை அணிவித்து வரவேற்பு
UPDATED : மார் 13, 2024 12:00 AM
ADDED : மார் 13, 2024 05:32 PM
பந்தலுார்:
பந்தலுார் அருகே மாநில எல்லையான எருமாடு பகுதி உள்ளது.இங்குள்ள மராட்டி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில், தமிழ், ஆங்கிலம், மலையாளம் வழிகளில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. பள்ளியில் மாணவர் சேர்க்கை துவங்கி உள்ள நிலையில், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு, மாணவர்கள் இணைந்து பல்வேறு தலைவர்களின் முகமூடி அணிந்தும், தலைவர்களின் வேடம் அணிந்தும், பழங்குடியின கிராமங்களுக்கு ஊர்வலமாக சென்றனர்.தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் பெற்றோரை ஒருங்கிணைக்கும் வகையில், மாணவிகளின் நடனம் இடம்பெற்றது. பள்ளி ஆசிரியர் ஏஞ்சல் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் அஸ்பீனா, பி.டி.ஏ., தலைவர் சவுகத் அலி முன்னிலை வகித்தனர்.அதை தொடர்ந்து தலைவர்களின் வேடம் அணிந்து சென்ற மாணவர்கள், அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதன் அவசியம் குறித்து விளக்கம் அளித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் முகமது அஷ்ரப் தலைமை வகித்து, கல்வியின் அவசியம் குறித்து பேசினார்.அதனை தொடர்ந்து, வீடு தோறும் சென்று, பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு மாலை அணிவித்து, அவர்களின் பெற்றோருக்கு தாம்பூலம் வழங்கி, அரசு பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தி, உடனடி சேர்க்கையும் நடத்தப்பட்டது. அதில், ஒரே நாளில் பத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.வித்தியாசமான முறையில் பழங்குடியின மாணவர்களை பள்ளியில் சேர்த்த நிகழ்வு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. நிகழ்ச்சியில், கவுன்சிலர் சுஜாதா உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் ஜமீலா நன்றி கூறினார்.

