அரசு கல்லுாரி, ஐ.டி.ஐ.,யில் மின் தடை அடிக்கடி நடப்பதால் மாணவர்கள் பாதிப்பு
அரசு கல்லுாரி, ஐ.டி.ஐ.,யில் மின் தடை அடிக்கடி நடப்பதால் மாணவர்கள் பாதிப்பு
UPDATED : மார் 14, 2024 12:00 AM
ADDED : மார் 14, 2024 05:48 PM
சென்னை:
பெரும்பாக்கம் அரசு கலைக்கல்லுாரியில், 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அருகில் உள்ள ஐ.டி.ஐ.,யில், 200க்கும் அதிகமானோர் பயில்கின்றனர்.இந்த இரு கல்வி நிறுவனங்களுக்கு, பிரதான மின்கம்பத்தில் இருந்து இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதில், இரண்டு கம்பங்களுக்கு இடைப்பட்ட மின்கம்பி, கை எட்டும் துாரத்தில் தாழ்வாக செல்கின்றன. இந்த இடத்தில், மரங்கள், செடிகள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன.லேசாக காற்றடிக்கும்போது, தாழ்வாக செல்லும் கம்பிகள் ஒன்றோடு ஒன்றாக உரசி, மின் தடை ஏற்படுகிறது. கல்வி நிறுவனங்களில், பரிசோதனை கூடம், கணினி மற்றும் இதர மின்சாதனங்கள் உள்ளன. அடிக்கடி மின் தடை ஏற்படுவதால், வகுப்பு நடத்த முடியாமல் பேராசிரியர்கள் சிரமப்படுகின்றனர்.வெயில் காலம் துவங்கி விட்டதால், மின்விசிறிகள் இயங்காமல் மாணவ - மாணவியர் புழுக்கத்தில் இருக்கின்றனர். தாழ்வாக செல்லும் மின்கம்பியை ஒட்டி மயானத்திற்கான பாதை செல்கிறது. இவ்வழியாக, இறுதி சடங்குக்கு செல்லும் வாகனங்களும், மின்கம்பியில் உரசி அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.மின்கம்பிகளை உயர்த்த வேண்டி, கல்வி நிறுவனங்கள் சார்பில், சித்தாலப்பாக்கம் மின்வாரியத்திடம் பல முறை கூறியும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. உயர் அதிகாரிகள் தலையிட்டு, தாழ்வாக செல்லும் மின்கம்பியை உயர்த்தி கட்ட வேண்டும் என, மாணவ, மாணவியர் கோரிக்கை விடுத்தனர்.

