என்.சி.சி.,யில் மூன்று லட்சம் பேர்: புதிதாக சேர்க்க மத்திய அரசு ஒப்புதல்
என்.சி.சி.,யில் மூன்று லட்சம் பேர்: புதிதாக சேர்க்க மத்திய அரசு ஒப்புதல்
UPDATED : மார் 14, 2024 12:00 AM
ADDED : மார் 14, 2024 05:53 PM
புதுடில்லி:
என்.சி.சி.,யில், கூடுதலாக மூன்று லட்சம் பேரை சேர்த்து விரிவாக்கம் செய்வதற்கான பரிந்துரைக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.நாடு முழுதும் உள்ள கல்வி நிறுவனங்களில், என்.சி.சி., எனப்படும், தேசிய மாணவர் படை செயல்பட்டு வருகிறது. இதில் உள்ள மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி கல்வி நிறுவனங்களிடமிருந்து ராணு அமைச்சகத்துக்கு கோரிக்கைகள் வந்தன.இதையடுத்து என்.சி.சி.,யை விரிவாக்கம் செய்வதற்கான பரிந்துரைக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து ராணுவ அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கடந்த, 1948ல் 20,000 மாணவர்களுடன் என்.சி.சி., துவங்கப்பட்டது. இப்போது அதன் தேவை அதிகரித்துள்ளதால், கூடுதலாக மூன்று லட்சம் மாணவர்களை சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இதன் வாயிலாக என்.சி.சி.,யின் மாணவர்கள் பலம், 20 லட்சமாக உயரும். மேலும், உலகின் பெரிய சீருடை இளைஞர் அமைப்பாகவும் இது மாறும்.இந்த ஒப்புதல் வாயிலாக இரண்டு புதிய என்.சி.சி., அலகுகள் உருவாக்கப்படுவதுடன் புதிதாக நான்கு பிரிவு தலைமையகங்களும் அமைக்கப்படும். மேலும் இந்த படையில் உள்ள மாணவர்களுக்கு தரமான பயிற்சி கிடைப்பதுடன் வேலை வாய்ப்பும் உறுதி செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

