மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டம்: இணைய தமிழகம் ஆர்வம்
மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டம்: இணைய தமிழகம் ஆர்வம்
UPDATED : மார் 16, 2024 12:00 AM
ADDED : மார் 16, 2024 05:20 PM
சென்னை:
மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டத்தில் இணைய தமிழக அரசு ஆர்வம் காட்டி வருகிறது.பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் என்ற பெயரில் மத்திய அரசின் புதிய திட்டம் 2022ம் ஆண்டில் அறிமுகமானது. இந்த திட்டத்தில், நாடு முழுதும் முதற்கட்டமாக 14,500 பள்ளிகள் தேர்வு செய்யப்படும். அவற்றில் புதிய கல்விக் கொள்கை அமலாகும். நவீன வகுப்பறைகள், ஸ்மார்ட் வகுப்பறைகள், நீர் பாதுகாப்பு, பசுமை எரிசக்தி பயன்பாடு, நவீன விளையாட்டு உபகரணங்களுடன் பயிற்சி என, பல்வேறு முன் மாதிரி நவீன கட்டமைப்புகள், மத்திய அரசின் நிதி உதவியில் ஏற்படுத்தப்படும்.இந்த திட்டத்தில் 29 மாநிலங்கள் கையெழுத்திட்டு உள்ளன. பீஹார் இணைய முயற்சித்து வருகிறது. பஞ்சாப் ஏற்கனவே இணைந்து அரசியல் காரணங்களால் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற முடிவு செய்து உள்ளது. தமிழகம், மேற்கு வங்கம், டில்லி, கேரளா, ஒடிசா மாநிலங்கள் இன்னும் பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டத்தில் இணையவில்லை.இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் புதிய பள்ளிகள் துவங்குவதற்கு தமிழக பள்ளிகல்வித்துறை ஆர்வமாக உள்ளது. வரும் கல்வியாண்டு துவங்குவதற்கு முன்னர், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக, மத்திய பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கடிதம் அனுப்பி உள்ளார்.இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:
புதிய கல்விக் கொள்கையை தமிழகம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது. எந்நாளும் அதனை எதிர்ப்போம். மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. அதை நோக்கிதான் நாங்கள் செயல்படுகிறோம்.மத்திய அரசின் நவீன பள்ளிகள் துவங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மட்டுமே கையெழுத்து போட்டு உள்ளோம். அதனால், மத்திய அரசின் கல்விக்கொள்கையை ஏற்றுக் கொள்கிறோம் என்று அர்த்தம் ஆகாது. குழு அமைத்து அதில் வேண்டியவற்றை மட்டுமே எடுத்துக் கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.