தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து வருகிறது இந்தியா: கவர்னர் ரவி
தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து வருகிறது இந்தியா: கவர்னர் ரவி
UPDATED : மார் 17, 2024 12:00 AM
ADDED : மார் 18, 2024 09:11 AM
சென்னை:
உலகளவில் இந்தியா தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து வருகிறது என தமிழக கவர்னர் ரவி கூறினார்.பிக்கி புளோ எனப்படும், இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபையின், பெண்கள் கூட்டமைப்பு சார்பில், 17வது ஆண்டு, பெண் சாதனையாளர்கள் 2024 விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.பிக்கி புளோ தலைவர் ராஜி ராஜு வரவேற்புரை ஆற்றினார். விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக கவர்னர் ரவி, பல்வேறு துறைகளில் தனிச்சிறப்பு, தலைமைத்துவம், புதுமையான மாற்றத்தை ஏற்படுத்திய பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்ட, ஒன்பது பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.பின்னர், கவர்னர் ரவி பேசியதாவது:
இந்தியா, 10 ஆண்டுகளாக வளர்ச்சியடைந்து வருகிறது. உலகளவில் இந்தியா தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து வருகிறது. அறிவியல் தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை கண்டுள்ளது. 2047ல் இந்தியா தன்னிறைவு பெற்ற வல்லரசு நாடாக உருவெடுக்கும். இதற்கான, பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுவருகிறது.நம் நாட்டில், பெண்கள் முன்னேற்றத்தில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது. தமிழக பல்கலையில் தங்கம் பதக்கம் பெறும் 100 பேரில், 80 பேர் பெண்களாக இருக்கின்றனர்.ஆனாலும், அவர்கள் ஏதோ சில காரணத்தால், அடுத்தகட்ட சாதனையை நோக்கி செல்வதில்லை. தங்களது சாதனை, கனவு திட்டங்களை நிறைவேற்றாமல், இல்லதரசிகளாக வாழ்ந்துவருகின்றனர்.இங்கு சாதனையாளர்களாக விருது பெற்றுள்ள பெண்கள், மற்ற பெண்கள் மாணவியரிடம் நேரில் சென்று உங்களின் சாதனையை எடுத்து கூறி ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.