UPDATED : மார் 20, 2024 12:00 AM
ADDED : மார் 20, 2024 09:32 AM
மதுரை:
மதுரை சொக்கிக்குளம் டேக்வாண்டோ பயிற்சியாளர் நாராயணன் கால்களை பயன்படுத்தி ஆக்ஸ் கிக் மூலம் ஒரு நிமிடத்தில் 48 கான்கிரீட் கற்களை உடைத்து புதிய கின்னஸ் சாதனை படைத்தார்.இத்தாலியின் மிலன் நகரில் கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சியை பனிஜய் இத்தாலியா நிறுவனம் நடத்தியது. இதில் உலக அளவில் 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இப்போட்டியில் பங்கு பெற இந்தியாவில் இருந்து மதுரை டேக்வாண்டோ பயிற்சியாளர் நாராயணன் தேர்வு செய்யப்பட்டார். இவர் 30 கின்னஸ் உலக சாதனைகள் படைத்துள்ளார்.2021ம் ஆண்டில் கால்களை பயன்படுத்தி ஆக்ஸ் கிக் மூலம் ஒரு நிமிடத்தில் 37 கான்கிரீட் கற்களை உடைத்து கின்னஸ் சாதனை படைத்தார். மூன்று ஆண்டுகளாக யாரும் முறியடிக்காத இந்த சாதனையை, ஒரு நிமிடத்தில் 48 கான்கிரீட் கற்களை உடைத்து அவரே முறியடித்து சாதனை படைத்தார். இது அவருக்கு 31வது சாதனையாகும். அவரை குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.