அரசு பள்ளியில் படித்தால் டாக்டர்- விழிப்புணர்வு ஊர்வலம் நடத்திய மாணவர்கள்
அரசு பள்ளியில் படித்தால் டாக்டர்- விழிப்புணர்வு ஊர்வலம் நடத்திய மாணவர்கள்
UPDATED : மார் 20, 2024 12:00 AM
ADDED : மார் 20, 2024 05:26 PM
திருப்பூர்:
அரசு பள்ளியில், தங்கள் குழந்தைகளை படிக்க வையுங்கள்; இட ஒதுக்கீடு பெற்று, டாக்டராக்குங்கள் என வலியுறுத்தி, மாணவ, மாணவியர் குடியிருப்பு பகுதியில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.திருப்பூர், கருமாரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வலியுறுத்தி, விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். பள்ளி வளாகத்தில் துவங்கிய மாணவர்களின் ஊர்வலம் சீயங்காடு, மூகாம்பிகை நகர், முல்லைநகர், நேதாஜிநகர் வழியாக சென்று, மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் உமாசாந்தி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். தங்கள் படிக்கும் அரசு பள்ளியில், உங்கள் குழந்தைகளை பெற்றோர் சேர்த்தால், இட ஒதுக்கீடு பெற்று, டாக்டராக முடியும், என மாணவ, மாணவியர் கோஷம் எழுப்பினர்.குடியிருப்பு பகுதி மக்களிடம், உங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்திடுங்கள்; எதிர்காலத்தை திட்டமிடுங்கள் என தலைப்பிட்ட நோட்டீஸ்களை ஆசிரியர்கள் வினியோகித்தனர்.அதில், அரசு பள்ளியில் படிப்பது பெருமையின் அடையாளம், ஆடல், பாடல், விளையாட்டு செயல்பாடுகள் வாயிலாக பாடங்களை கற்றுக்கொடுக்க எண்ணும் எழுத்தும் திட்டம், காலை உணவுத்திட்டம், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தொழிற்கல்வியில், 7.5 சதவீத இடஒதுக்கீடு, மருத்துவ படிப்புக்கு இட ஒதுக்கீடு, மாணவியரின் உயர்கல்விக்கென புதுமைப் பெண் திட்டம்.அறிவுத்திறனை பெருகேற்ற, வினாடி வினா, திரைப்பட ரசனை, விமர்சனப் பார்வை வளர்க்க பள்ளிதோறும் சிறார் திரைப்படம் திரையிடல், அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வானவில் மன்றம், கலைகளை வளர்க்க கலைத்திருவிழா போன்றவை அரசு பள்ளிகளில் தான் உள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.