பள்ளி மாணவியர் பிரதமரை பார்க்கவே வந்தனர்!: பா.ஜ., விளக்கம்
பள்ளி மாணவியர் பிரதமரை பார்க்கவே வந்தனர்!: பா.ஜ., விளக்கம்
UPDATED : மார் 20, 2024 12:00 AM
ADDED : மார் 20, 2024 05:32 PM
கோவை:
பிரதமர் மோடி கோவையில் பங்கேற்ற ரோடு ஷோவில் பள்ளிக்குழந்தைகள் ஆர்வம் மிகுதியால் தன்னெழுச்சியாக பங்கேற்று பிரதமருக்கு ஆரவாரம் செய்தனரே தவிர கட்சி சார்பில் நாங்கள் பங்கேற்க செய்யவில்லை என்று பா.ஜ.,தேர்தல் கமிஷனுக்கு விளக்கம் அளித்துள்ளது.பிரதமர் மோடி பங்கேற்ற பிரம்மாண்ட ரோடு ஷோ நிகழ்ச்சியில் கோவையில் கடந்த மார்ச் 18 அன்று நடந்தது. இதில் 2.5 கி.மீ துாரத்திற்கு பிரதமர் திறந்த வாகனத்தில் மக்களை பார்த்து கைகளை அசைத்தவாறு மேட்டுப்பாளையம் சாலை வழியாக ஆர்.எஸ்.புரம் வரை சென்றார். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியரும் பங்கேற்றதாக தி.மு.க., சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரிடம் தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டது.இதனையடுத்து, பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் எந்த அடிப்படையில் பள்ளி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர் என்று கேட்டு கோவை மாவட்ட பா.ஜ.,தலைவர் ரமேஷ் குமாருக்கு, கோவை லோக்சபா தொகுதிக்குட்பட்ட கோவை வடக்கு சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.இதற்கு சுரேஷிடம் அளித்த விளக்கத்தில், இந்நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், மகளிர், குழந்தைகள், வயோதிகர்கள் என்று பலரும் பிரதமரை நேரில் காண வேண்டும் என்ற விருப்பத்தின் பேரிலும், தன்னெழுச்சியாகவே வருகை தந்தனர் என்று ரமேஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார்.இது குறித்து ரமேஷ்குமார் கூறியதாவது:
தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து கடந்த மார்ச் 16 மாலை 3:00 மணி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதை நாங்கள் முழுமையாக தெரிந்து கொண்டோம். அதன் படி நாங்கள் பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோ வில் எவ்விதமான தேர்தல் நடத்தை விதிமுறைகளையும் மீறவில்லை. பள்ளிக்குழந்தைகள் பிரதமர் மோடியை வரவேற்க தாங்களாகவே வருகை தந்துள்ளனர்.அவர்கள் பிரதமருக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்தவோ, துண்டு பிரசுரங்களை வினியோகிப்பது, என்று எந்த ஒரு தேர்தல் பிரசார பணியிலும் ஈடுபடவில்லை. அவர்களது விருப்பம் பிரதமர் மோடியை நேரில் பார்க்க வேண்டும் அவ்வளவு தான். அதற்காக மட்டுமே வருகை தந்துள்ளனர்.ஜனநாயக நாட்டில் பள்ளி மாணவர்கள் பிரதமரை நேரில் பார்க்க வருவதில் எந்த தவறும் இல்லை. இதற்காக விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியது தான் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கோவை வடக்கு சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவருக்கு விரிவான விளக்கத்தை அளித்து விட்டேன். இவ்வாறு ரமேஷ்குமார் கூறினார்.