UPDATED : மார் 21, 2024 12:00 AM
ADDED : மார் 21, 2024 09:26 AM
சென்னை:
வருகைப்பதிவு குறைவாக இருக்கும் மருத்துவ மாணவர்களை துணைத் தேர்வு எழுதவும், வகுப்புகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என, சமூக சமத்துவத்திற்கான அரசு டாக்டர் சங்கம் கோரி உள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் நாராயணசாமிக்கு, அச்சங்கத்தில் செயலர் ரவீந்திரநாத் அனுப்பியுள்ள கடிதம்:
இரண்டாம் ஆண்டு மருத்துவ படிப்பு பயிலும் பல மாணவர்கள், வருகைப்பதிவு குறைவாக இருந்ததால், முதன்மைத் தேர்வுகளை எழுதுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. மூன்றாம் ஆண்டு வகுப்புகளுக்கு செல்லவும் அனுமதிக்கவில்லை என, தகவல் கிடைத்துள்ளது.நீலகிரி, கிருஷ்ணகிரி, விருதுநகர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மருத்துவக் கல்லுாரிகளில் இத்தகைய நிலை உள்ளது. இரண்டாம் ஆண்டில் வருகை பதிவு குறைவாக இருந்ததாகக்கூறி, மூன்றாம் ஆண்டு வகுப்புக்கு அனுமதிக்காத பட்சத்தில், எதிர்காலத்தில் மாணவர்களுக்கு வருகைப்பதிவு குறையக்கூடும்.எனவே, மாணவர்களை துணைத் தேர்வுகளை எழுதுவதற்கும், வகுப்புகளில் பங்கேற்பதற்கும் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.