UPDATED : மார் 21, 2024 12:00 AM
ADDED : மார் 21, 2024 09:29 AM
சென்னை:
குரூப் - 2 பதவியில், 29 காலியிடங்களை நிரப்ப, 3ம் கட்ட நேர்முக தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு துறைகளில், குரூப் - 2 பதவிகளில், 5413 காலியிடங்களை நிரப்ப, 2022 மே மாதம் முதல்நிலை தகுதி தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கடந்த ஆண்டு பிப்.,25ல் பிரதான தேர்வு நடந்தது.இதில், தேர்ச்சியானவர்களில் தரவரிசையில் முன்னிலை பெற்றவர்களுக்கு, நேர்முக தேர்வு அடங்கிய, 161 பதவிகளுக்கு, 2 கட்டமாக நேர்முக தேர்வு நடத்தி, பணி ஒதுக்கீடு முடிந்துள்ளது. இன்னும், 29 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் சேர, முன்னிலை தரவரிசையில் உள்ள விண்ணப்பதாரர்கள் முன்வரவில்லை.இந்நிலையில், 3ம் கட்ட நேர்முக தேர்வு நடத்தி, காலியிடங்களை நிரப்ப உள்ளதாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நேற்று அறிவித்தது.இதன்படி, 29 காலியிடங்களில் சேர விருப்பம் தெரிவிப்போர், தங்கள் விபரத்தை பதிவு செய்ய, 3 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதன்பின் நேர்முக தேர்வுக்கான அழைப்பு கடிதம் அனுப்பப்படும். நேர்முக தேர்வு இல்லாத பதவிகளுக்கு மதிப்பெண் மற்றும் தரவரிசை விபரம், அடுத்த மாதம் வெளியிடப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.