ஏப்., முதல் வாரத்தில் கோடைமழைக்கு வாய்ப்பு; வேளாண் பல்கலை
ஏப்., முதல் வாரத்தில் கோடைமழைக்கு வாய்ப்பு; வேளாண் பல்கலை
UPDATED : மார் 21, 2024 12:00 AM
ADDED : மார் 21, 2024 09:40 AM
கோவை:
கோவையில் வெயில் அதிகரித்து வருவதால், ஏப்., முதல் வாரத்தில் கோடை மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன. எனவே விவசாயிகள், கோடை உழவுக்கு நிலங்களை தயார் செய்து வைத்துக்கொள்ள, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தியுள்ளது.கடந்த, 30 ஆண்டு கால சராசரியின்படி கோவையில் பிப்., மார்ச் மாதங்களில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஆனால், நடப்பாண்டில் கோவையில் சில இடங்களில், 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது.எதிர்வரும் ஐந்து நாட்கள், பகல் நேர வெப்பநிலை, 35-36 டிகிரி செல்சியஸ் ஆகவும், இரவு நேர வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். காலை நேர காற்றின் ஈரப்பதம் 85 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 47 சதவீதமாகவும் இருக்கும் என கணித்துள்ளது, வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம்.இதுகுறித்து, மையத்தின் தலைவர் சத்தியமூர்த்தி கூறியதாவது:கோவையில் வழக்கத்தை காட்டிலும், வெப்பநிலை சற்று அதிகரித்துள்ளது. எல்நினோ நிகழ்வு இதற்கு ஒரு காரணம் என கருதப்படுகிறது. விவசாயிகள், பயிர்களுக்கு முக்கிய பருவங்களில் அடிக்கடி குறைந்த அளவில் நீர் பாசனம் செய்யவேண்டும். பயிர் மூடாக்கு செய்வதால், ஆவியாவதை தவிர்த்து மண் ஈரப்பதத்தை பாதுகாக்கலாம்.வெயில் அதிகரிப்பதால், கோழிகள் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது; பண்ணையை சுற்றியும், மேற்பகுதியிலும் நண்பகல் நேரத்தில் நீர் தெளிக்க வேண்டும். ஈர சாக்குகளை தொங்கவிட வேண்டும்.சுத்தமான தண்ணீர் தேவையான அளவு கொடுக்க வேண்டும். காலை, மாலை வேளைகளில் மட்டும் உணவு கொடுக்க வேண்டும். இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதன் வாயிலாக, கோழிகள் உயிரிழப்பை தடுக்கலாம்.வெப்பம் அதிகரிப்பதால், அடுத்த வாரம் அல்லது ஏப்., முதல் வாரத்தில் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது. வழக்கமாக, மார்ச், ஏப்., மே மாதங்களில் 100 முதல் 150 மி.மீ., கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது.இதனால், விவசாயிகள் கோடை மழைக்கு நிலத்தை தயார்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். கோடை உழவு செய்வதால், களை கட்டுப்படுத்துதல், புழுக்களை கட்டுப்படுத்துதல், மண் அரிப்பை தடுத்தல் உட்பட பல பயன்கள் உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

