கல்வி அலுவலங்களில் நடக்குது ஆசிரியர் குறைதீர் கூட்டம்
கல்வி அலுவலங்களில் நடக்குது ஆசிரியர் குறைதீர் கூட்டம்
UPDATED : மார் 24, 2024 12:00 AM
ADDED : மார் 24, 2024 11:58 AM
மதுரை:
மதுரையில் வட்டாரக் கல்வி அலுவலங்கள் (பி.இ.ஓ.,) அளவில் நடக்கும் ஆசிரியர்களுக்கான குறைதீர்க் கூட்டங்கள் ஏனோ தானோ என்ற வகையில் நடப்பதால் பல மாதங்களாகியும் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.மதுரை தொடக்க கல்வியில் 15 பி.இ.ஓ., அலுவலகங்கள் உள்ளன. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். ஆசிரியர்களுக்கு பணப் பலன் சார்ந்த பணப் பலன் சாராத கோரிக்கைகளுக்கு தீர்வுகாணும் வகையில் மாதந்தோறும் முதல் சனியில் பி.இ.ஓ., அலுவலகங்களில் குறைதீர்க் கூட்டங்கள் நடக்கின்றன. இவ்வகை கூட்டங்கள் சம்பிரதாயமாக நடப்பதாக சர்ச்சை எழுந்துள்ளன. பல மாதங்களாகியும் அளிக்கப்படும் மனுக்களுக்கு தீர்வு கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:
இக்கூட்டத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு, மருத்துவ விடுப்பு, வருங்கால வைப்பு நிதியில் கடன் பெறுதல், தேர்வு நிலை, சிறப்பு நிலை, தகுதிகாண் பருவம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆசிரியர்கள் மனுக்கள் அளிக்கின்றனர். ஒவ்வொரு கூட்டத்திலும் பி.இ.ஓ.,க்கள், கண்காணிப்பாளர்கள், பிரிவு அலுவலர்கள் பங்கேற்க வேண்டும். மனுக்கள் விவரங்கள் பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். ஆனால் பெரும்பாலான அலுவலங்களில் இதுபோல் கூட்டம் நடப்பதில்லை.மாறாக சுழற்சி முறையில் ஒரு அலுவலரை மட்டும் மனுக்கள் வாங்கி பதிவு செய்வதற்கு பணி ஒதுக்கீடு செய்து கண்துடைப்பதாக கூட்டத்தை நடத்துகின்றனர். ஒரு கூட்டத்தில் கொடுத்த மனுக்களுக்கு அடுத்த கூட்டம் நடப்பதற்குள் தீர்வு காண வேண்டும். ஆனால் அதுபோல் நடப்பதில்லை. ஒரு சில பி.இ.ஓ.,க்கள் உரிய முறையில் கூட்டங்களை நடத்தினாலும் பலர் இதை ஏனோ தானோ என்ற அளவில் நடத்துகின்றனர். சி.இ.ஓ., கார்த்திகா சர்பிரைஸ் விசிட் மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.