UPDATED : நவ 22, 2010 12:00 AM
ADDED : நவ 22, 2010 11:33 AM
சென்னை: “தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களையும் இணையதளத்தின் மூலம் இணைக்கவுள்ளதை மத்திய குழு பார்வையிட்டுச் சென்றுள்ளது,” என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தேசிய நூலக வார நிறைவு விழா சென்னையில் நேற்று நடந்தது. பள்ளிக் கல்வித் துறை செயலர் கணேசன் (கூடுதல் பொறுப்பு)தலைமை தாங்கினார். நூலகத் துறை இயக்குனர் அறிவொளி வரவேற்றார்.
சிறந்த நூலகர்களுக்கு, ‘நல்நூலகர்’ விருது வழங்கிப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: நூலகத்துறை ஒரு துறையையும் தாண்டி இயக்கமாகச் செயல்படுகிறது. நான்கரை ஆண்டு காலத்தில் 335 புதிய நூலகங்கள் அமைக்கப்பட்டதுடன், பழைய நூலகங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு நூலகங்களோடு தனியார் நூலகங்களும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
நூலகங்கள் இல்லாத ஊராட்சிகளே இல்லை என்ற நிலையை ஏற்படுத்த இருக்கிறோம். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களையும் இணையதளம் மூலம் இணைக்கவுள்ளதை மத்தியக் குழு இன்று (நேற்று) பார்வையிட்டு சென்றுள்ளது. பள்ளிகளில் புத்தகப் பூங்கொத்துத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தவுள்ளோம். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மாவட்ட நூலக ஆணைய தலைவர் கயல் தினகரன், துணைத் தலைவர் கோபண்ணா, ராஜாராம் களப்பணி அலுவலர் ராமசாமி மற்றும் நூலக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில், பொது நூலக இணை இயக்குனர் நரேஷ் நன்றி கூறினார்.
