UPDATED : நவ 23, 2010 12:00 AM
ADDED : நவ 23, 2010 12:32 PM
சென்னை: தமிழக அரசின் சுற்றுச்சூழல் விருதுகளை பெற தனிநபர், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை இயக்குனர் சீனிவாசமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வரும் கல்வி நிறுவனங்கள், தனிநபர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் விருதுகளை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு விருதுக்கு, கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள், தனிநபர்களும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை விருதுக்கு, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் என இரு பிரிவிலும் விண்ணப்பிக்கலாம்.
சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கட்டுரை விருதுக்கு, சுற்றுச்சூழலின் சிறந்த மேலாண்மைக்கு வித்திடும் ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். விருதுக்கான விண்ணப்பப் படிவங்கள், ‘இயக்குனர், சுற்றுச்சூழல் துறை, பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை -15’ என்ற முகவரியில், ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து பணி நாட்களிலும் கிடைக்கும்.
விண்ணப்பங்களை பெற ஜனவரி 7ம் தேதியும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர ஜனவரி 27ம் தேதியும் கடைசி நாள். மேலும் விவரங்களை, www.environment.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
