UPDATED : நவ 26, 2010 12:00 AM
ADDED : நவ 26, 2010 01:47 PM
கொடைக்கானல்: பள்ளிக்கு வரும் மாணவர்கள் பாத்திரங்கள் தூக்கவும், கழுவவும், வளாகத்தை சுத்தம் செய்யவும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் வடகவுஞ்சியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு பெரும்பள்ளம், மேல்பள்ளம், அசன்கொடை பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் பல கி.மீ., தூரம் நடந்து வந்து படிக்கின்றனர். மாணவர்களை பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யவும்,மதிய வேளையில் சத்துணவு பாத்திரங்களை கழுவவும் வற்புறுத்துகின்றனர்.
மேலும் பள்ளி நேரத்தில் மாணவர்களை நீண்ட தூரமுள்ள கடைகளுக்கு சென்று ‘டீ’ வாங்கிச் வரச் சொல்வதும், கழிப்பறைக்கு வேண்டிய தண்ணீரை தெருக்குழாய்களில் பிடித்து வரச் செய்யும் அவலமும் தொடர்கிறது. அரசு பள்ளியில் பாடம் பயில வரும் மாணவர்களை, இது போன்ற பணிகளில் ஈடுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மலைக் கிராமவாசிகளின் கல்வி தரத்தை உயர்த்த முடியும்.
