UPDATED : நவ 30, 2010 12:00 AM
ADDED : நவ 30, 2010 05:19 PM
நாமக்கல்: "கடந்த 1990-92ம் ஆண்டு தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், பயிற்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் நலச்சங்கத்தினர், மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்ட விவரம்: கடந்த 1990-92ம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு முழுவதும் இயங்கி வந்த தனியார் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் 28 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் பயிற்சி பெற்றனர். அந்த பயிற்சிப் பள்ளிகள் அங்கீகாரம் பெறாதவை எனக் கூறி அவற்றை அரசு மூடியது.
அதனால் அப்பயிற்சிப் பள்ளிகளில் படித்த அனைவரும் கடும் பதிப்பிற்குள்ளானோம். பல போராட்டங்களுக்கு பின் உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றமும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மீண்டும் மறு பயிற்சி அளிக்க உத்தரவிட்டது. அதன்படி மறு பயிற்சியை முடிக்க 20 ஆண்டுகளானது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதே அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு முன்னுரிமை, காலம், வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு வேலை அளிக்க வேண்டும்.
அரசு இனியும் காலம் தாழ்த்தினால் வேலை கிடைக்காமலே ஓய்வு பெறும் வயதையடைவோம். தற்போது இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தில் மாவட்ட முன்னுரிமை என்பதை மாநில முன்னுரிமை என மாற்றப்பட்டு பணி நியமனம் நடந்து வருகிறது. அதனால் நாங்கள் மேலும் பத்து ஆண்டு பின்னுக்கு தள்ளப்பட்டு கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறோம்.
மறு பயிற்சி பெற்ற அனைவருடைய வயதும் தற்போது 40 முதல் 50யை எட்டியுள்ளது. தமிழக அரசு சிறப்பு முன்னுரிமை அளித்து அனைவருக்கும் வேலை கொடுத்தாலே பத்து முதல் 12 ஆண்டு வரை மட்டுமே வேலை செய்ய இயலும். எனவே தமிழக அரசு சிறப்பு அனுமதியுடன் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மறுபயிற்சி முடித்து பாதிக்கப்பட்ட பயிற்சி ஆசிரியர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
