தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போலி சான்றிதழ் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை: தேர்வுத்துறை

போலி சான்றிதழ் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை: தேர்வுத்துறை

போலி சான்றிதழ் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை: தேர்வுத்துறை


UPDATED : டிச 02, 2010 12:00 AM

ADDED : டிச 02, 2010 04:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 02, 2010 12:00 AM ADDED : டிச 02, 2010 04:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

‘உடல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் வழங்கப்படும் சலுகைகளை, நன்றாக உள்ள மாணவர்கள் பெறுவதற்காக போலி மருத்துவ சான்றிதழ்களை சமர்ப்பித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க, தேர்வுத்துறை பல வகைகளில் ஒவ்வொரு ஆண்டும் நடவடிக்கை எடுக்கிறது. எனினும், தேர்வுத் துறையின் கண்களில் மண்ணை தூவிவிட்டு, மாணவர்கள் முறைகேடான செயல்களில் ஈடுபடுகின்றனர்.


ஆள் மாறாட்டம் செய்தல், ‘பிட்’டுகளை வைத்து தேர்வெழுதுதல், பக்கத்து மாணவர்களின் விடைத்தாள்களை வாங்கி எழுதுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்களில் மாணவர்கள் ஈடுபடுகின்றனர். இப்படிப்பட்ட மாணவர்களுக்கு, அவர்கள் செய்த தவறுகளுக்கு ஏற்ப தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் வரை, முறைகேடுகளில் சிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 400க்கும் அதிகமாக இருந்தது.


தேர்வுத்துறையின் கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளால், முறைகேடில் பிடிபடும் மாணவர்களின் எண்ணிக்கை, 250ஆக குறைந்துள்ளது. இதற்கு, பறக்கும் படை குழுவினரின் கண்காணிப்பதும், ஒரு முக்கியக் காரணம். இந்நிலையில், உடல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு, தேர்வின்போது அரசு வழங்கியுள்ள சலுகைகளை, நன்றாக இருக்கும் மாணவர்களும் முறைகேடாக பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பார்வையிழந்தவர்கள், தேர்வு எழுத முடியாத அளவிற்கு கைகளில் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு உடல் ஊனமுற்றவர்களுக்கு, தேர்வெழுதுவதற்கு கூடுதலாக ஒரு மணிநேரம் வாய்ப்பு தரப்படுகிறது.


மேலும், பார்வையில்லாத மற்றும் கைகள் ஊனமுற்ற மாணவர்களுக்குப் பதில், ஆசிரியர் விடை எழுதும் சலுகையும் அமலில் இருக்கிறது. இத்துடன், தற்போது, ‘டிஸ்லெக்சியா’ குறைபாடுள்ள மாணவர்களுக்கும் சலுகை வழங்கப்படுகிறது. இந்த வகை குறைபாடுள்ள மாணவர்கள், கேள்விக்குரிய சரியான விடையை கணித்தாலும், அதை எழுதும்போது தவறாக எழுதுவர். நரம்பு சம்பந்தமான பிரச்னைகளால் பாதிக்கப்படும் இதுபோன்ற மாணவர்களுக்கும், கூடுதலாக ஒரு மணிநேரம் உள்ளிட்ட சலுகைகள் அளிக்கப்படுகின்றன.


இந்த வகை மாணவர்கள் பிரிவில் தான் முறைகேடுகள் நடப்பதாக கூறப்படுகிறது. ‘சைக்காலஜி’ மற்றும், ‘நியூராலஜி’ டாக்டர்களிடம் சான்றிதழ் பெற்று, பள்ளி தலைமை ஆசிரியரிடமும் சான்றிதழ் பெற்று, தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். அவர், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிக்கு பரிந்துரை செய்வார். முதன்மைக் கல்வி அதிகாரி, தேர்வுத்துறைக்கு பரிந்துரை செய்தால், அந்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அரசு நிர்ணயித்துள்ள சலுகைகள் வழங்கப்படுகின்றன.


‘டிஸ்லெக்சியா’ பிரிவில், அதிகமான மாணவர்கள் விண்ணப்பம் செய்வதாக, தேர்வுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாக, சென்னை நகரில் உள்ள பிரபலமான தனியார் பள்ளிகளில் இருந்து அதிகளவில் விண்ணப்பங்கள் வருவதாகவும் கூறப்படுகிறது. ‘மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் பரிந்துரை செய்தாலே, அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற நிலை இருப்பதால், மாணவர்களின் குறைபாடுகளை எங்களால் உறுதி செய்ய முடியாத நிலை இருக்கிறது’ என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மேலும், ‘மாணவர்களுக்குப் பதில் தேர்வெழுதும் ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நிலையில் தான் இருக்க வேண்டும். ஆனால், சில முதன்மைக் கல்வி அதிகாரிகள், முதுகலை ஆசிரியர்களைக்கொண்டு தேர்வெழுத வைக்கின்றனர். மாணவர் தேர்வெழுதும் பாடம் சார்ந்த முதுகலை ஆசிரியரை நியமித்தால், மாணவகள் மீது பரிதாபப்பட்டு, ஆசிரியர்களே கூடுதலாக விடை எழுதும் வாய்ப்பும் இருக்கிறது’ என்றும், துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற உயர்கல்வி படிப்புகளில் சேர, பிளஸ் 2 தேர்வில் பெறும் மதிப்பெண்கள் முக்கியமாக உள்ள நிலையில், தேர்வில் எவ்விதமான முறைகேடுகளும் நடக்கக்கூடாது என்பதில், அதிகாரிகள் உறுதியாக இருக்கின்றனர். எனவே, உடல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை, நன்றாக உள்ள மாணவர்கள் முறைகேடான வகையில் பெற, போலி மருத்துவ சான்றிதழ்களை சமர்ப்பித்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.


தேர்வு நடந்து கொண்டிருக்கும்போது கண்டுபிடிக்கப்பட்டால், அதுவரை நடந்த தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்வதற்கு, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. அதேபோல், அனைத்து தேர்வுகளையும் எழுதி முடித்தபின் முறைகேடு தெரிந்தால், ஒட்டுமொத்த தேர்வுகளும் ரத்து செய்யப்படும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us