கல்விக் கட்டணம்: மறு ஆய்வு செய்யக் கோரிய மனு நிராகரிப்பு
கல்விக் கட்டணம்: மறு ஆய்வு செய்யக் கோரிய மனு நிராகரிப்பு
UPDATED : டிச 03, 2010 12:00 AM
ADDED : டிச 03, 2010 04:10 PM
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் தொடர்பாக, ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரிய மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.
தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்து, ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு அறிவித்தது. இதில் திருப்தியடையாத 6,400 பள்ளிகள், ஆட்சேபனை தெரிவித்து குழுவிடம் மேல்முறையீடு செய்தன. இதையடுத்து, பள்ளிகளை நேரில் ஆய்வு செய்து, கட்டணம் நிர்ணயிக்க கால அவகாசம் ஆகும் என்பதால், ஏற்கனவே குழு நிர்ணயித்த கட்டணத்தை இந்த கல்வியாண்டில் வசூலிக்க வேண்டும் என நீதிபதி குழு அறிவித்தது.
இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் பள்ளிகள் சார்பிலும், பள்ளிகளின் சங்கங்களும் மனுக்கள் தாக்கல் செய்தன. மனுக்களை விசாரித்த நீதிபதி வாசுகி, தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து நீதிபதி கோவிந்தராஜன் குழு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக பள்ளிக்கல்வி துறை, பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச் செயலர் கஜேந்திரபாபு, அப்பீல் மனுக்களை தாக்கல் செய்தனர். இதை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ விசாரித்தது.
ஆட்சேபனை தெரிவித்துள்ள 6,400 பள்ளிகளின் மேல் முறையீடுகளை, நான்கு மாதங்களுக்குள் கமிட்டி பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், கமிட்டியின் உத்தரவை ஏற்றுக் கொண்ட 4,534 பள்ளிகள், கமிட்டி அனுமதித்ததை விட, கூடுதல் கட்டணம் வசூலிக்க உரிமையில்லை என்றும் ‘முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டது. அக்டோபர் 5ம் தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதை மறு ஆய்வு செய்யக்கோரி, தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: அப்பீல் மனுவை தாக்கல் செய்ய, பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை என்கிற அமைப்புக்கு தகுதியில்லை. தனி நீதிபதி முன் கல்வி கட்டணம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, இந்த அமைப்பு சார்பில் யாரும் ஆஜராகவில்லை. பள்ளிகளுக்கான கட்டணம் வசூலிப்பு ஒழுங்குமுறை சட்டத்தில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை, நீதிபதி குழு பின்பற்றவில்லை என்பது தான் எங்கள் முக்கிய குறைபாடு.
அதை ஐகோர்ட், முழுமையாக பரிசீலித்திருக்க வேண்டும். கல்விக் கட்டணம் தொடர்பான சட்டம் செல்லும் என ‘டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டது. இந்த உத்தரவின் கூறப்பட்டுள்ள கருத்துக்களை பின்பற்றி தான், இடைக்கால உத்தரவை தனி நீதிபதி பிறப்பித்தார். தற்போது, அப்பீல் மனுக்கள் மீது பிறப்பித்த உத்தரவானது, ஏற்கனவே ‘டிவிஷன் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவுக்கு முரணாக உள்ளது. எனவே, இதை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
அப்பீல் மனுக்கள் மீது இறுதி உத்தரவை பிறப்பிப்பதற்கு முன், தனி நீதிபதி முன் வழக்கு தொடுத்திருந்த 10 மனுதாரர்கள் தரப்பையும் கேட்டிருக்க வேண்டும். எனவே, கடந்த அக்டோபர் 5ம் தேதி பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ விசாரித்தது. அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன், ‘ஐகோர்ட் உத்தரவில் தவறில்லை. நீதிபதி குழு நன்றாக செயல்படுகிறது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றார். இதையடுத்து, ‘ஐகோர்ட் உத்தரவில் நாங்கள் எந்த தவறும் காணவில்லை. மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என ‘முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டது.
