நெட்/செட் தகுதியை எதிர்த்த மனுக்கள் சென்னை ஐகோர்ட் நிராகரிப்பு
நெட்/செட் தகுதியை எதிர்த்த மனுக்கள் சென்னை ஐகோர்ட் நிராகரிப்பு
UPDATED : டிச 07, 2010 12:00 AM
ADDED : டிச 07, 2010 12:01 PM
கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை நியமிக்க, எம்.பில்., முடித்தவர்கள் நெட் அல்லது ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், என அறிவிக்கப்பட்டது. பிஎச்.டி., முடித்திருந்தால், தகுதி தேர்வில் விதி விலக்கு அளிக்கப்பட்டது. எம்.பில்., முடித்தவர்களுக்கு, 1991ம் ஆண்டு முதல் விதி விலக்கு வழங்கப்பட்டிருந்தது. அது தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்களில், ‘1993ம் ஆண்டுக்கு முன் எம்.பில்., முடித்தவர்களுக்கு நெட் அல்லது ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என வற்புறுத்தக் கூடாது. இந்த தகுதி தேர்வு வேண்டும் என வற்புறுத்தாமல், எங்கள் விண்ணப்பங்களை ஏற்க வேண்டும்’ என கோரப்பட்டது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ விசாரித்தது. மத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன், மத்திய அரசு மூத்த வக்கீல்கள் பி.சந்திரசேகரன், விஜயராகவன், தமிழக அரசு சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன், சிறப்பு அரசு பிளீடர் சங்கரன் ஆஜராகினர்.
‘முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு: கற்பிக்கும் தரத்தை மேம்படுத்த, ஆசிரியர்கள் பணிக்கு தேசிய அளவிலான தகுதி தேர்வு (நெட்) அவசியம், என மனித வள மேம்பாட்டு துறை கருதியுள்ளது. இதற்காக நிபுணர்கள், கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. எம்.பில்., பட்டம் பெற்றிருந்தாலும், ஆசிரியர்கள் நியமனத்துக்கு நெட் அல்லது ஸ்லெட் கண்டிப்பாக வேண்டும் என, நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
பேராசிரியர் முங்கேகர் குழுவின் அறிக்கையை பரிசீலித்த பின், உயர் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக, விதிமுறைகளை வகுக்குமாறு பல்கலைக் கழக மான்யக் குழுவுக்கு (யு.ஜி.சி.,) உத்தரவிடப்பட்டுள்ளது. கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும், என்கிற நோக்கத்தைப் பரிசீலிக்காமல், நெட் அல்லது ஸ்லெட் தேர்வு எழுத விதி விலக்கு அளிக்க யு.ஜி.சி., முயற்சித்துள்ளது.
யு.ஜி.சி.,யின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்க, மத்திய அரசு மறுத்தது சரி தான். எனவே, மத்திய அரசு எடுத்த முடிவு சட்ட விரோதமாது, தன்னிச்சையானது, என கூற முடியாது. மத்திய அரசின் முடிவானது, கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், பொது நலன் கருதியும் எடுக்கப்பட்டது. இந்த மனுக்களில் தகுதியில்லை. அப்பீல், ரிட் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு ‘முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.
