தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனியார் பள்ளி மாணவர்களை, தனித்தேர்வர்களாக தேர்வு எழுத வைக்க முயற்சி

தனியார் பள்ளி மாணவர்களை, தனித்தேர்வர்களாக தேர்வு எழுத வைக்க முயற்சி

தனியார் பள்ளி மாணவர்களை, தனித்தேர்வர்களாக தேர்வு எழுத வைக்க முயற்சி


UPDATED : டிச 08, 2010 12:00 AM

ADDED : டிச 08, 2010 02:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 08, 2010 12:00 AM ADDED : டிச 08, 2010 02:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒவ்வொரு ஆண்டும் படிப்பில் சுமாராக இருக்கும் மாணவர்களை, கடைசி நேரத்தில் தனித்தேர்வு மாணவர்களாக பங்கேற்கச் செய்யும் முறைகேடான செயல்களில், பல்வேறு தனியார் பள்ளிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த ஆண்டும், சென்னை உட்பட மாநிலம் முழுவதும் பல்வேறு நகரங்களில், பத்தாம் வகுப்பு மாணவர்களை, தனித்தேர்வு மாணவர்களாக பங்கேற்கச் செய்யும் வேலைகளில், பல தனியார் பள்ளிகள் இறங்கியுள்ளன.


மாணவர் சேர்க்கையின்போது, "சிக்கினால் போதும்' என, அனைத்து மாணவர்களையும் சேர்த்துக் கொண்டு, ஆண்டு முழுவதும் கட்டணம் வசூலிக்கின்றனர். காலாண்டுத் தேர்வின்போதே, சரியாக படிக்காத மாணவர்களை தனியாக பட்டியல் எடுத்து, அரையாண்டு தேர்வுக்குள், "தேறுகிறார்களா&' என, பார்க்கின்றனர். "பொதுத்தேர்வில் தேறமாட்டார்கள்&' என தெரியவந்தால், உடனே, மார்ச், ஏப்ரல் மாதம் நடக்கும் பொதுத்தேர்வு பட்டியலில் அவர்களது பெயரை கொடுக்காமல், தனித்தேர்வு மாணவர்களாக பங்கேற்கச் செய்கின்றனர்.


ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் தான், இந்த அத்துமீறல்கள் நடக்கின்றன. பல பெற்றோர்களுக்கு, பொதுத்தேர்வு முடியும் வரை தெரியாமலேயே இருந்து விடுகிறது. முன்கூட்டியே தெரிந்தால், "இஷ்டம் இருந்தால் தனித்தேர்வு மாணவர்களாக தேர்வெழுத நடவடிக்கை எடுக்கிறோம்; இல்லையென்றால் டி.சி., வாங்கிக் கொள்ளுங்கள்&' என, கறாராக கூறி விடுகின்றனர். இதனால், கடைசி நேரத்தில் செய்வதறியாமல் பெற்றோர்கள் கண்ணீர் விடுகின்றனர்.


இந்த ஆண்டும், பல தனியார் பள்ளிகள் முறைகேடான செயல்களில் இறங்கியுள்ளன. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வாக விண்ணப்பிக்க, வரும் 15ம் தேதி வரை கால அவகாசம் இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சரியாக படிக்காத மாணவர்களை தனித்தேர்வு மாணவர்களாக, பள்ளி நிர்வாகங்களே விண்ணப்பித்து வருகின்றன.சென்னை வடபழனியில் உள்ள ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் கி÷ஷார்குமார்.


பத்தாம் வகுப்பு மாணவரான இவரை திடீரென, தனித்தேர்வு மாணவராக பங்கேற்கச் செய்ய, பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து, மாணவரின் தந்தை தனசேகரன், பள்ளி நிர்வாகிகளை சந்தித்து, நியாயம் கேட்டதற்கு, சரியான பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகத்தில் அதிகாரிகளை சந்தித்து புகார் அளித்துள்ளார். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


இது குறித்து தனசேகரன் கூறியதாவது: "கால் டாக்சி&' ஓட்டி, சிரமப்பட்டு எனது மகனை படிக்க வைத்து வருகிறேன். இந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் தான், எனது மகனை சேர்த்தேன். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கியுள்ள இந்நேரத்தில், திடீரென தனித்தேர்வு மாணவராக தேர்வெழுதும்படி, பள்ளி ஆசிரியர்கள் கூறியுள்ளனர். நேரில் சென்று கேட்டதற்கு,"தனித்தேர்வு மாணவராக தேர்வெழுத சம்மதம் என்றால், தேவையான ஏற்பாடுகளைச் செய்கிறோம்; இல்லையெனில், "டி.சி&' வாங்கிச் செல்லுங்கள்&' என கூறி விட்டனர். எனது மகன், ஐந்து நாட்களாக தூங்கவில்லை; சரியாக சாப்பிடுவதில்லை.


குடும்பத்தில் நிம்மதியே போய்விட்டது. ஒரு ஆண்டு பள்ளியில் படித்துவிட்டு, கடைசி நேரத்தில் சரியாக படிக்கவில்லை என்ற காரணத்தை காட்டி, தனித்தேர்வு மாணவராக தேர்வெழுத வைப்பது எந்த வகையில் நியாயம்? இந்த பிரச்னை குறித்து, முதல்வர் தனிப்பிரிவுக்கும் புகார் அனுப்பியுள்ளேன். இவ்வாறு தனசேகரன் கூறினார்.


இதே பள்ளியில் 20க்கும் மேற்பட்ட மாணவர்களை, தனித்தேர்வு மாணவர்களாக எழுத வைக்க, பள்ளி நிர்வாகம் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதேபோல், மாநிலம் முழுவதும் பல்வேறு தனியார் பள்ளிகள், ரெகுலர் மாணவர்களை, தனித்தேர்வு மாணவர்களாக தேர்வெழுத வைக்க முயற்சித்து வருகின்றன. தனியார் பள்ளிகளின் இந்த முறைகேடுகளை, பள்ளிக் கல்வி இயக்ககமோ, மெட்ரிக் பள்ளிகளுக்கென்று இயங்கும் இயக்குனர் அலுவலகமோ சுத்தமாக கண்டுகொள்வது கிடையாது. தவறு செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு, அதிகாரிகள் அலறுகின்றனர்.


மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக நாராயணசாமி இருந்தபோது, தயவு, தாட்சண்யம் பார்க்காமல் தவறு செய்த பல பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தார். இதனால், தனியார் பள்ளிகள் மத்தியில் பயம் இருந்தது. தற்போது, அதிகாரிகளிடம் புகார் கொடுத்தாலும் கூட, பள்ளி நிர்வாகங்கள் கண்டுகொள்வதில்லை.


கட்டண நிர்ணயக்குழு தலைவராக கோவிந்தராஜன் இருந்தபோது, எட்டு தனியார் பள்ளிகள், அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலித்தது விசாரணையில் நிரூபிக்கப்பட்டு, அந்த பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனருக்கு பரிந்துரை செய்தார். அந்தப் பள்ளிகள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், அந்த கோப்புகளை அப்படியே அதிகாரிகள் கிடப்பில் போட்டுவிட்டனர். இதுபோன்ற செயல்களால், அதிகாரிகள் மீது தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு சுத்தமாக பயம் இல்லாமல் போய்விட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us