இந்தியக் கடற்படையில் பணியுடன் கூடிய பி.டெக்., கல்வி வாய்ப்பு
இந்தியக் கடற்படையில் பணியுடன் கூடிய பி.டெக்., கல்வி வாய்ப்பு
UPDATED : டிச 15, 2010 12:00 AM
ADDED : டிச 15, 2010 01:06 PM
இன்றைய இளம் தலைமுறையின் வழக்கமான கலாசாரத்திலிருந்து மாறுபட்டு நேர்மை, நன்னடத்தை, தைரியம், திறன் மேம்பாடு ஆகிய அத்தனை கோணங்களிலும் ஒருவரை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான இந்தியக் கடற் படை பி.டெக்., படிப்புகளை நடத்தி வருகிறது.
இங்கு படிக்கும் மாணவர்களுக்கு முழுமையான பயிற்சி மற்றும் எதிர்கால இந்தியாவிற்கான முழுமையான குடிமகன்களாக மாற்றத் தகுந்த திறன் வாய்ந்த ஆசிரியர்கள் இந்தப் படிப்புகளை வழங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படிப்புகளில் திருமணமாகாத ஆண் மாணவர்களைச் சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயது வரம்பு
இந்தியக் கடற்படையின் பி.டெக்., படிப்பில் சேர 17 வயது முதல் 19 1/2 வயதுக்குள் இருப்பவராக இருக்க வேண்டும். அதாவது 01.01.1992 முதல் 01.07.1994க்குள் பிறந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி
இந்தியக் கப்பல் படையின் பி.டெக்., படிப்பில் சேர இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களை உள்ளடக்கிய பிளஸ் 2 அளவிலான படிப்பில் இந்த மூன்று பாடங்களிலும் சேர்த்து குறைந்த பட்சம் 70 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். இதோடு ஆங்கிலப் பாடத்தில் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 வில் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உடல் தகுதிகள்
இந்தியக் கடற்படையின் பி.டெக்., படிப்பில் சேர மேற்கண்ட தகுதிகளுடன் சில குறைந்த பட்ச உடல் தகுதிகளும் தேவைப்படும். உயரம் குறைந்த பட்சம் 157 செ.மீட்டரும் இதற்கு இணையான எடையும் பெற்றிருக்க வேண்டும். கண்ணாடி அணிந்தவர்களும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்க முடியும் என்ற போதும், வண்ணக் குறைபாடு, மாலைக்கண் நோய் போன்ற குறைகளை உடையவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
தேர்ச்சி முறை
கல்வித் தகுதி அடிப்படையில் எஸ்.எஸ்.பி., நடத்தும் நேர்காணலுக்கான அழைப்பு அனுப்பப்படும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மருத்துவத் தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
இந்தியக் கடற் படையின் பி.டெக்., படிப்பில் சேர விரும்புபவர்கள் பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பத்தை நிரப்பி, பின் வரும் முகவரிக்கு 27.12.2010க்குள் கிடைக்குமாறு அனுப்பவேண்டும். அனுப்பும் கவரின் மீது தவறாமல் "10+2 Cadet (B Tech) Entry Scheme & Jul 2011 Course, Educational Qualification..... Percentage ......% in PCM " என்று குறிப்பிடவும்.
முகவரி
Post Bag No.4,
Chanakyapuri,
New Delhi -110021.
