UPDATED : டிச 20, 2010 12:00 AM
ADDED : டிச 20, 2010 12:40 PM
தொடக்கப் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை கொள்கைகள் சம்பந்தமாக டெல்லி அரசு அளித்துள்ள வழிகாட்டுதல்கள், ஆர்.டி.இ. சட்டத்தை மீறுவதாக உள்ளன என்று டெல்லியின் குழந்தை உரிமை பாதுகாப்பு கமிஷன் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லி மாநில அரசின் கல்வித்துறையானது, தனது சமீபத்திய அறிவிப்பில், டெல்லியின் தனியார் தொடக்கப்பள்ளிகள் தங்களின் மாணவர் சேர்க்கை விதிமுறைகளை, தாங்களே வகுத்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தது. ஆனால் இதனை கடுமையாக எதிர்த்துள்ள குழந்தை உரிமை பாதுகாப்பு கமிஷன், அரசின் இந்த முடிவானது, சம்பந்தப்பட்ட பள்ளிகளின் மாணவர் சேர்க்கை நடைமுறைகளில் அரசுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் செய்வதோடு, மத்திய அரசின் ஆர்.டி.இ. சட்டத்தை மீறுவதாகவும் உள்ளது என்று கண்டித்துள்ளது.
இதன்மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர் இடஒதுக்கீடு, கடந்த வருடம் சேர்க்கை மறுக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள், ஆர்.டி.இ. சட்டத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள மாணவர் நிலைகள் போன்ற அம்சங்கள் சம்பந்தமாக எழும் சிக்கல்கள் குறித்தும் இந்த கமிஷன் கவலை தெரிவித்துள்ளது.
எனவே இந்த உத்தரவு குறித்து மறுபரிசீலனை செய்து, பாதகங்களை தவிர்க்குமாறு டெல்லி அரசை அறிவுறுத்தியுள்ளது.
