மாற்றுத்திறனாளிகள் குழந்தைக்கு எதிர்காலம்: இணை இயக்குனர்
மாற்றுத்திறனாளிகள் குழந்தைக்கு எதிர்காலம்: இணை இயக்குனர்
UPDATED : டிச 25, 2010 12:00 AM
ADDED : டிச 25, 2010 02:59 PM
திருச்சி: ""அனைவருக்கும் கல்வி இயக்க சிறப்பு ஆசிரியர்கள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைக்கு உள்ள தனித்திறனை கண்டறிந்து வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும்,'' என்று திட்ட இணை இயக்குனர் லதா பேசினார்.
திருச்சி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், திருச்சி, கரூர், கன்னியாகுமரி, தேனி, சிவகங்கை, தஞ்சை, நீலகிரி, திருநெல்வேலி, தர்மபுரி ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான 371 சிறப்பு ஆசிரியருக்கு, கடந்த மாதம் 23ம்தேதி திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில், மண்டல பல்நோக்கு பயிற்சி முகாம் நடந்தது.
நேற்று நடந்த நிறைவுவிழாவில், அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இணை இயக்குனர் லதா பேசியதாவது:தமிழகத்தில் முதல்முறையாக மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கான 30 நாள் பயிற்சி திருச்சியில் நடந்துள்ளது.குறிப்பிட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைக்கு மட்டுமே பயிற்றுவிப்பதற்கு கற்று கொண்ட ஆசிரியர்களுக்கு, எல்லாவிதமான குழந்தையும் கையாள பயிற்சிளிக்கப்பட்டது. இப்பயிற்சியின் தாக்கம் மூலம் அனைத்துவகையான மாற்றுத்திறனாளி குழந்தையையும் சிறப்பு ஆசிரியர் கையாள வேண்டும்.
பயிற்சியின் தாக்கம் மூலம், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைக்கு உள்ள தனித்திறனை கண்டறிந்து வாய்ப்புகளை உருவாக்கி தரவேண்டும். அவர்களுக்கான எதிர்காலத்தை அமைத்து தருவதற்கான முழு முயற்சியை சிறப்பு ஆசிரியர் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
பயிற்சியில் கண்பார்வையற்றோர் காதுகேளாதோர் மூளை வளர்ச்சி குன்றியோர், கவனக்குறைவு ஆகியவற்றின் தன்மை அவை பெற்றுள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பது, கற்பித்தல் முறை குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டது.திருச்சி மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் அகஸ்டின் பீட்டர் பாத்திமா, சாக்சீடு இயக்குனர் சகோதரி மரியகமலம், கல்லூரி முதல்வர் சிஸ்டர் சற்குணா பங்கேற்றனர்.
