UPDATED : டிச 27, 2010 12:00 AM
ADDED : டிச 27, 2010 03:44 PM
போட்டிச் சூழலில் பன் மொழிப் புலமை என்பது நமது தனித்துவத்தை வெளிப்படுத்த அவசியமானது. ஒவ்வொரு நாடும் அந்நாட்டுக்கென்று, பழக்க வழக்கங்கள், கலாசாரங்கள்,மொழிச்சிறப்புகளைக் கொண்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியால், பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பணிபுரியும் நிலை ஏற்படுகின்றன.
அந்த சூழ்நிலையில், நம்முடன் பணிபுரியும் சகபணியாளர்களுடன் தொடர்பு கொள்ளவோ, நம்முடைய தேவைகளை பெறவோ மொழி அறிவு அவசியமானதாகிறது. மேலும், பொருளாதாரத்தில் வேகமாக வளரக்கூடிய ஆங்கிலம் பேசாத நாடுகளில், அவர்களது உள்நாட்டு மொழியிலேயே பேசவேண்டி உள்ளது. இதற்காக, நம்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் அயல் நாட்டு மொழியை கற்றுச் சிறந்து விளங்குவதற்காக பல்வேறு படிப்புகளை வழங்குகின்றன. ஆனால் பல்வேறு வெளிநாட்டு மொழி இருந்தாலும், பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஸ் மொழிகளையே பெரும்பாலான மாணவர்கள் படிக்கின்றனர்.
சமீபத்தில், சி.பி.எஸ்.இ., "மாண்டரின்' (சைனீஸ்) மொழியை இரண்டாவது மொழிப்பாடமாக அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது பகுதிநேர சான்றிதழ் படிப்பு, டிப்ளமோ மற்றும் அட்வான்ஸ் டிப்ளமோ என பல வழிகளில் அயல்நாட்டு மொழிகள் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகின்றன. இதற்காக ஆங்கிலம் மற்றும் அயல்நாட்டு மொழிகள் பல்கலைக்கழகம் (ஈ.எப்.எல்., பல்கலைக்கழகம்) மொழிகள் சார்ந்த இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை வழங்குகிறது அவற்றில் ரஷ்யன், அரபிக், சைனீஸ், ஜெர்மன் மற்றும் ஜப்பனீஸ் போன்ற மொழிபாடங்கள் உள்ளன.
இப்பல்கலைக்கழகம் பொதுவாக ஏப்ரல் இரண்டாவது வாரம் சேர்க்கை விவரங்களை அறிவிக்கிறது. விபரங்களுக்கு www.efluniversity.ac.in என்ற இணையதளத்தை பாருங்கள். ஏலியெஸ் பிரான்சைஸ், விவேகானந்தா இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் லாங்வேஜ், மாக்ஸ் முல்லர் பவன் போன்ற கல்வி நிறுவனங்களும் மொழிகள் சார்ந்த படிப்புகளை வழங்குகின்றன.
