UPDATED : டிச 28, 2010 12:00 AM
ADDED : டிச 28, 2010 03:55 PM
மாணவர்களின் அத்தகைய சந்தேகங்கள் சிலவற்றுக்கு(தேர்ந்தெடுக்கப்பட்டவை) இங்கே பதில்கள் தரப்பட்டுள்ளன. இதன்மூலம் மாணவர்களில் பலர் பயன்பெற முடியும்.
கே:
நான் எம்.ஏ. புள்ளியியல் முடித்துள்ளேன். என்னுடைய பாடங்கள் புள்ளியியல்(ஹானர்ஸ்) மற்றும் பொருளியல்(துணைப்பாடமாக). எனக்கு எந்தமாதிரி வேலைவாய்ப்புகள் கிடைக்கும். புள்ளியியல் மற்றும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பணிகளிலேயே எனக்கு விருப்பம். தனியார் துறைகளில் என் போன்றவர்களுக்கு இருக்கும் வேலை வாய்ப்புகள் என்ன?ப:
அனைத்து பெரிய நிறுவனங்களிலும் உள்ள ஆய்வு பிரிவுகளில் புள்ளியியல் வல்லுனர்கள் தேவைப்படுகிறார்கள். அதேசமயம் உங்களின் பாட அறிவை தொழில்துறை பயன்பாட்டிற்கு ஏற்றவகையில் மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். வியாபாரத்தை வழிநடத்தும் பொருளாதார அடிப்படைகளைப் பற்றிய ஆழமான அறிவு உங்களின் மதிப்பை கூட்டும். வித்தியாசமான பரந்த அறிவை கொண்டிருக்கும் ஆட்களுக்கு தொழில் நிறுவனங்கள் எப்போதுமே முன்னுரிமை கொடுக்கின்றன.இதுதவிர உயர்ந்த நிலையிலான கணக்கிடும் திறனும் நிறுவனங்களை கவர்வதற்கான ஒரு முக்கிய அம்சமாகும். முன்னணி டேட்டாபேஸ் பற்றிய நல்ல அறிமுகமும் வேலை பெறுவதில் மிகுந்த உதவியாக இருக்கும்.
கே:
ஆங்கிலத்தில் நன்கு எழுதவும், பேசவும் தேவைப்படும் திறனை நான் எவ்வாறு வளர்த்துக் கொள்வது?ப:
நல்ல மொழியறிவானது, சிறந்த பணியை பெறுவதற்கும், பொது கலந்துரையாடலுக்கும் மிகவும் முக்கியம். அந்தவகையில் ஆங்கில மொழியானது நம் நாட்டில் வேலை பெறுவதற்கான உயர்ந்தபட்ச அந்தஸ்தாக கருதப்படுகிறது. அந்த ஆங்கில மொழிப் புலமையை வளர்த்துக்கொள்வது பெரிய கஷ்டம் ஒன்றும் இல்லை. முதலில் ஆங்கிலத்தைக் கண்டு பயப்படாமல் இருக்க வேண்டும். ஒரேநாள் இரவில் எந்த மொழியையும் சரளமாக பேசிவிட முடியாது. அதற்கான பல படிநிலைகள் உள்ளன. முதலில் ஒரு நாளைக்கு ஒரு ஆங்கில செய்தித்தாளையாவது படிக்க வேண்டும்.மேலும் எளிமையான நடையைக் கொண்ட ஆங்கில செய்தித்தாள்களைப் படித்துப் பழகி, அதன்பிறகு சற்றுக் கடினமான செய்தித்தாளுக்கு செல்ல வேண்டும். உங்களின் நண்பரோ அல்லது உடன்வசிக்கும் உறவினரில் ஒருவரோ நல்ல ஆங்கில புலமை பெற்றவராக இருந்தால், உங்கள் தவறுகளை திருத்துமாறு அவர்களைக் கேட்கலாம்.
ஒருநாளைக்கு குறைந்தது 10 வரிகளையாவது எழுதுவதோடு, உங்கள் தாய்மொழியிலிருந்தும் 10 வரிகளை எழுதி, அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பழக வேண்டும். பின்னர் அவற்றை சரிபார்க்கவும் வேண்டும். இந்த பயிற்சியின்மூலம் உங்களின் எழுதுதல் மற்றும் சிந்திக்கும் திறன் மேம்படும். மேலும் நீங்கள் வசிக்கும் ஊரிலோ அல்லது அருகிலோ பிரிட்டிஷ் கவுன்சில் இருந்தால், அக்கவுன்சில் நடத்தும் ஆங்கில பயிற்சிகளில் கலந்துகொள்ளவும். ஏனெனில் இந்த பயிற்சிகள் மிகவும் திட்டமிடப்பட்டது என்பதுடன், வெவ்வேறு நிலைகளிலும் இருப்பதால் உங்களின் மொழித்திறனை நன்கு மேம்படுத்த உதவும்.
கே:
தொழில்துறை உற்பத்தி மற்றும் மேலாண்மை படிப்பிற்கு இருக்கும் வேலைவாய்ப்புகள் என்ன?ப:
பொதுவாகவே இன்றைய நிலையில் நல்ல வேலைவாய்ப்பை பெற்றுள்ள படிப்பாக, அதேசமயம் ஆட்டோமொபைல் மற்றும் கனரக பொறியியல் துறையில் அதிக வாய்ப்புகளைக் கொண்டுள்ள படிப்பாக இது விளங்குகிறது. இத்துறையில் திட்டமிடுதலும், அமைப்பாக்கமும் மிகவும் முக்கியமான அம்சமாக இருப்பதால், வலுவான மேலாண்மை சார்பு அறிவும், தொழில்நுட்ப ஆர்வமும் இல்லாமல் இப்படிப்பை இளநிலை பொறியியல் பட்டத்திற்கு தேர்வுசெய்ய வேண்டாம். மேலும் இத்துறையில் ஜே.ஐ.டி. போன்ற புதிய தொழில்நுட்பங்கள் சேர்ந்துள்ளன.எனவே இளநிலை படிப்பில் மெக்கானிக்கல் அல்லது எலக்ட்ரிக்கல் துறையை தேர்வுசெய்து படித்து, ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ உற்பத்திப் பிரிவில் வேலை செய்துவிட்டு, பிறகு தொழில்துறை உற்பத்தி அல்லது மேலாண்மை துறையில் முதுநிலை படிப்பை மேற்கொள்ளலாம். கல்கத்தா - ஐ.ஐ.எம். -இலுள்ள எதிர்கால தேவைக்கான தலைமைத்துவ படிப்பு அல்லது மும்பை என்.ஐ.டி.ஐ.இ. -இலுள்ள தொழில்துறை பொறியியலுக்கான முதுநிலைப் படிப்பு ஆகியவை முன்னணி நிறுவனங்களில் வேலை பெறுவதற்கு பெரிதும் துணைபுரிபவை. உற்பத்தி நடவடிக்கைகள் நாட்டில் வளர்ந்துவரும் சூழலில், இதுபோன்ற படிப்புகள் மிகுந்த மதிப்பை உடையவை.
கே:
நான் தற்போது வணிகவியல் பட்டப்படிப்பு படித்துக்கொண்டுள்ளேன். இதனுடன் சேர்த்து படிக்கக்கூடிய வகையில் ஏதேனும் குறுகியகால படிப்புகள் உள்ளனவா?ப:
ஆம். பல நிலைகளிலான படிப்புகள் உள்ளன. அவற்றுள் மிகவும் முக்கியமானது ஐ.சி.டபிள்யூ.ஏ. படிப்பு. உங்களுக்கு இதில் விருப்பம் இல்லையெனில், பல பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் டேக்சேஷன் சம்பந்தமான டிப்ளமோ படிக்கலாம். டேக்ஸ் நெட்வொர்க்கானது நாட்டில் பரந்தளவில் இருப்பதோடு மட்டுமின்றி, மிகச்சிறிய தொழில் நிறுவனங்களில்கூட அக்கவுண்டிங் அசிஸ்டன்ட்கள் தேவைப்படுகிறார்கள்.இதைத்தவிர நிதி திட்டமிடுதல் துறையில் வேறொரு முக்கியமான டிப்ளமோ படிப்பும் உள்ளது. அதேசமயம் கம்ப்யூட்டிங் படிப்பும் நீங்கள் நினைவில் வைக்கவேண்டிய ஒன்று. மேலும் முன்னணி பயிற்சி நிறுவனங்களால் வணிகவியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கென்றே தயாரித்து அளிக்கப்படும் வேறுபல குறுகியகால படிப்புகளும் உள்ளன.
கே:
நான் தற்போது பி.இ. இறுதியாண்டு படிக்கிறேன். எனது படிப்பு காலத்தின்போது நான் எந்த சார்பு பாடத்திட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. இதனால் நான் எனது வேலை வாய்ப்பின்போது பாதிக்கப்படுவேனா?ப:
ஒரு நிறுவனம் வேலைக்கான ஆட்களை பட்டியலிடுகையில், இதுபோன்ற தகுதிகளை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அதேசமயம் நேர்முகத்தேர்வில் போட்டி அதிகமாகும்போது நிலைமை வேறுவிதமாக ஆகிவிடுகிறது. அந்த சமயத்தில் இதுபோன்ற சார்பு பாடத்திட்ட நடவடிக்கைகள் நமக்கு பேருதவி புரிந்து, வேலையை பெற்றுத்தருகின்றன.அதேசமயம் படிப்பின்போது எதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்பதைப் பற்றி உங்களுக்கு குழப்பமாக இருக்கலாம். ஆனால் அதிகம் குழம்ப வேண்டியதில்லை. உங்கள் பகுதியிலுள்ள பின்தங்கிய குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது, உங்கள் விடுதியில் பணியாற்றும் உணவக தொழிலாளர்களின் பிரச்சினை சம்பந்தமாக குரல் கொடுக்கும்பொருட்டு அவர்களை ஓர் அணியாக்குவது, உள்ளூர் இளைஞர் வழிகாட்டு மையங்களில் தன்னார்வ ஆலோசகராக பங்கேற்பது, ரத்ததான முகாம்களில் கலந்துகொள்வது, மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட பல விழிப்புணர்வு முகாம்களில் பங்கேற்பது உள்ளிட்ட பல எளிய நடவடிக்கைகள் உள்ளன.
இதுபோன்ற நடவடிக்கைகள், நீங்கள் வேலை பெறுவதில் உதவுவதோடு மட்டுமின்றி, ஒரு மனிதனாக, சமூக வாழ்க்கையில் நீண்ட காலத்திற்கு உங்களுக்கு வலுசேர்க்கும் என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.
