UPDATED : டிச 30, 2010 12:00 AM
ADDED : டிச 30, 2010 03:04 PM
உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த சுஷ்மா வர்மா என்ற சிறுமி, தனது 10 வயதில் லக்னோ பல்கலையில் இளநிலை படிப்பில் சேர்ந்திருக்கிறாள்.
இந்த 2010௦ ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பு முடித்த சுஷ்மா, ஒரு கல்லூரியில் தற்காலிக அடிப்படையில் பட்டப்படிப்பிற்காக சேர்ந்தாள். ஆனால், லக்னோ பல்கலைக்கழகம் இளநிலை படிப்பில் சுஷ்மாவை சேர்த்துக் கொண்டால்தான், சுஷ்மா பி.எஸ்சி. தேர்வெழுத தாங்கள் அனுமதிக்க முடியும் என்று அக்கல்லூரி கூறிவிட்டதால், சுஷ்மாவின் பெற்றோர், லக்னோ பல்கலையில், சேர்க்கைக்காக சில மாதங்களுக்கு முன் விண்ணப்பம் செய்தனர்.
அதை பரிசீலித்த பல்கலை அதிகாரிகள், தற்போது சிறுமியின் சேர்க்கைக்கு அனுமதி அளித்துள்ளனர். சுஷ்மா போன்ற ஒவ்வொரு புத்திசாலி சிறுமிக்கும் வாய்ப்பளிக்க வேண்டியது எங்களின் கடமை. எங்களின் முடிவால் அந்த சிறுமியின் கனவுகள் நனவாகும் என நம்புவதாக பல்கலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்ற 2000, பிப்ரவரி மாதம் பிறந்த சுஷ்மா, தனது 7 வயதில் 59% மதிப்பெண் எடுத்து பத்தாம் வகுப்பையும், 10 வயதில் 62% மதிப்பெண்களுடன் 12 ஆம் வகுப்பையும் முடித்தார். சில காரணங்களால் 11 ஆம் வகுப்பு படிப்பை முடிக்காத சுஷ்மா, அதை இன்னும் 2 வருடங்களில் முடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுஷ்மாவின் தந்தை தேஜ் பகதூர் ஒரு கூலித் தொழிலாளி. தாய் படிப்பறிவில்லாதவர். சுஷ்மாவின் மூத்த சகோதரன் சைலேந்திராவும், கடந்த 2007 ஆம் ஆண்டு தனது 14 வது வயதில் கணிப்பொறி அறிவியலில் இளநிலை பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மகள் குறித்து தேஜ் பகதூர் கூறியதாவது, "டாக்டராக வேண்டும் என்பது என் மகளின் விருப்பம். எனவே பி.எஸ்சி. படிப்பில் விலங்கியல், தாவரவியல் மற்றும் வேதியியல் பாடங்களை எடுத்து படிக்கிறாள். லக்னோ பல்கலைக்கு மிகவும் நன்றி. எனது மகளின் சாதனை மூலம், ஒருநாள் லக்னோ பல்கலைக்கழகமே பெருமைப்படும் நிலைவரும்" என்றார்.
