54 கல்லூரிகளில் ஆயுர்வேத படிப்புக்கு அனுமதி மறுப்பு
54 கல்லூரிகளில் ஆயுர்வேத படிப்புக்கு அனுமதி மறுப்பு
UPDATED : டிச 31, 2010 12:00 AM
ADDED : டிச 31, 2010 03:53 PM
புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள 54 மருத்துவ கல்லூரிகளில், ஆயுர்வேத பட்டப்படிப்புகளுக்கு, 2010-11ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.
நாடுமுழுவதும் ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்த மருத்துவ படிப்புகளை வழங்கும் மருத்துவ கல்லூரிகளில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும், ஆயுஷ் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், பல மருத்துவ கல்லூரிகளில் ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்த மருத்துவ துறைகளில், போதிய ஆசிரியர்கள் இல்லை. மேலும், அந்த படிப்புகளுக்கு உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் தெரிந்தது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட 54 மருத்துவ கல்லூரிகள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டன. இதில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மூன்று அரசு கல்லூரிகளும் அடங்கும். மேலும், 2010-11ம் கல்வியாண்டில் சம்பந்தப்பட்ட கல்லூரிகள், மாணவர் சேர்க்கைக்கு மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து, மத்திய சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்த மருத்துவ பட்டப்படிப்புகள் வழங்கும் மருத்துவ கல்லூரிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், பல கல்லூரிகள் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டவிதிமுறைகளை பின்பற்றவில்லை என தெரிந்தது. மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, மாணவர்களின் விகிதத்தின் அடிப்படையில் போதிய ஆசிரியர்கள் இல்லை.
அடிப்படை கட்டமைப்பு வசதிகள், உபகரணங்கள் போன்றவையும் இல்லை.எனவே, 54 மருத்துவ கல்லூரிகள் 2010-11ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டது. கர்நாடகத்தில் 13 கல்லூரிகளும், பீகார், மத்திய பிரதேசத்தில் ஐந்து கல்லூரிகளும், மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா நான்கு கல்லூரிகளும் ஆயுர்வேத படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சட்டீஸ்கர், ஒடிசா மற்றும் கேரளாவில் தலா ஒரு கல்லூரியும் கருப்புப்பட்டியலில் இடம்பெற்றதால், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதில், பீகார், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசத்திலுள்ள மூன்று மாநில அரசுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரிகளும் அடங்கும்.
அதேவேளை, அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் 64 கல்லூரிகள் உள்பட நாடு முழுவதும் உள்ள, 247 மருத்துவ கல்லூரிகள் ஆயுர்வேதம் (பி.ஏ. எம்.எஸ்.,), யுனானி(பி.யு. எம்.எஸ்.,), சித்தா(பி.எஸ். எம்.எஸ்.,) ஆகிய மருத்துவ பட்டப்படிப்புகளை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
