9ம் வகுப்பில் வடிகட்டப்படும் அரசுப் பள்ளி மாணவர்கள்
9ம் வகுப்பில் வடிகட்டப்படும் அரசுப் பள்ளி மாணவர்கள்
UPDATED : ஜன 03, 2011 12:00 AM
ADDED : ஜன 03, 2011 01:37 PM
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை கருத்தில் கொண்டு, ஒன்பதாம் வகுப்பில் சராசரி மாணவர்கள், பள்ளி நிர்வாகத்தால், ‘பெயில்’ ஆக்கப்படுகின்றனர்.
இதனால், ஏராளமான மாணவர்கள் இடையிலேயே படிப்பை கைவிடும் நிலை உருவாகிறது. தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வரை அனைத்து பள்ளிகளிலும், சராசரி மாணவர்களை, ‘பெயில்’ செய்வது சாதாரண நிகழ்வாக இருந்து வந்தது. 2001ம் ஆண்டு, தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் அறிமுகமான பிறகு, பள்ளிப் படிப்பை முடிக்காமல் இடையிலேயே நிற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், சரியாக படிக்காத மாணவர்களை, ‘பெயில்’ ஆக்குவதால், அவர்களில் 80 சதவீதம் பேர், பள்ளிப் படிப்பை இடையிலேயே நிறுத்தி விடுவது தெரிந்தது. இதையடுத்து, பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்துவோரின் எண்ணிக்கையை குறைக்க, எட்டாம் வகுப்பு வரை, ‘பெயில்’ செய்வதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தை அதிகரித்துக் காட்ட, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், ஒன்பதாம் வகுப்பில் மாணவர்களை வடிகட்ட துவங்கியது. இதனால், ஒன்பதாம் வகுப்பில் பெயிலாகும் மாணவர்கள், சக மாணவர்களின் கேலி கிண்டலுக்கு பயந்து, பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தி விடுவதால், அவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.
கடந்த 2009-10ம் ஆண்டில், மத்திய அரசின் நிதியுதவியுடன் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், அனைத்து மாணவ, மாணவியருக்கும் தரமான இடைநிலைக் கல்வியை வழங்க வேண்டும் என்பதே முக்கிய குறிக்கோளாக உள்ளது.
இத்திட்டத்தில் புதிய பள்ளிகளை தரம் உயர்த்தவும், ஆசிரியர்களை நியமிக்கவும், லேப் வசதிகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், இத்திட்டத்தில் இடைநிலைக் கல்வியை இடையில் நிறுத்தும் மாணவர்கள் குறித்து, இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.‘இடைநிலைக் கல்வியை இடையில் நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க, ஒன்பதாம் வகுப்பில் பெயில் செய்யப்படுவதை தடுக்க வேண்டும்’ என, கோரிக்கை எழுந்துள்ளது.
