UPDATED : ஜன 04, 2011 12:00 AM
ADDED : ஜன 04, 2011 11:01 AM
கடந்த சில ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தை முதலீட்டாளர்களின் சொர்க்க பூமியாக மாற்றியுள்ள அந்த மாநில அரசு தனது அடுத்த குறிக்கோளாக கல்வி மேம்பாட்டை நிர்ணயித்துள்ளது. அடிப்படைக் கல்வியிலிருந்து உயர் தொழில்நுட்பக் கல்வி வரை அதிகபட்ச கவனம் செலுத்தப்பட்டு தீவிரமான புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என மாநில முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
2000ம் ஆண்டில் வெறும் 9 பல்கலைக்கழகங்களே அந்த மாநிலத்தில் இருந்தன. ஆனால் 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. ஆமதாபாத் ஐ.ஐ.டி.,யின் பொன் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது இதை மோடி தெரிவித்துள்ளார். ஆமதாபாத் ஐ.ஐ.டி.,யும் குஜராத் மாநிலமும் தற்போது 50வது ஆண்டு விழாவைக் கொண்டாடி வருகின்றன.
மாநிலத்தின் பல்வேறு துறைகளில் வளர்ச்சியை திட்டமிடுவதில் குஜராத் மாநில அரசின் பல்வேறு துறைகளுடன் ஆமதாபாத் ஐ.ஐ.டி., பெரும் பங்காற்றவிருப்பதாக மாநில அரசு கூறியுள்ளது. கடல்சார் துறை, துறைமுகம், மருத்துவ சேவை, நகர மேம்பாடு, நிதி, சுற்றுலா மற்றும் கல்வி ஆகியவற்றில் இவை இணைந்து பங்காற்றவுள்ளன. இந்தியாவின் பிற மாநிலங்களும் இதைப் போன்ற மாதிரிகளை பின்பற்றினால் அது நம்மை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
