UPDATED : ஜன 05, 2011 12:00 AM
ADDED : ஜன 05, 2011 10:40 AM
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும், தொழில் முனைவோருக்கான பயிற்சிகளில் சர்வதேச மாணவர்களின் பங்கேற்பு அதிகரித்து வருகிறது. மனிதவள மேம்பாட்டுக் கழகம், தொழில் முனைவோர் அமைப்பு, சிறுதொழில் வளர்ச்சிக்கான தேசிய கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து, இப்பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன.
இப்பயிற்சி வகுப்புகளில் நேபாளம், தென் ஆப்ரிக்கா, இலங்கை, கம்போடியா, கென்யா, மியான்மர், ஏமன் போன்ற பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்தும் ஆர்வத்துடன் பல மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். கடந்த 27 வருடங்களாக நடத்தப்படும்தொழில் முனைவோர் பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
தொழில் முனைவோர் துறை மற்றும் பல துறைகளில் உள்ள அனுபவம் மிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக தெற்காசியா, ஆப்ரிக்கா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள மாணவர்களை கருத்தில் கொண்டு பாடத் திட்டங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் சிறந்த உள்கட்டமைப்பும், சிறந்த வசதிகளும் கொண்ட நூலகமும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, உணவு, தங்குதல், விமான கட்டணம், படிப்புகான அனைத்து செலவையும் இந்திய அரசே ஏற்றுக்கொள்கிறது. இந்த பயிற்சி வகுப்பின் முக்கிய நோக்கம், நிர்வாகிகளின் திறமையை நிறுவனங்களின் தரத்தை உயர்த்த வழி செய்வதே.
எதிர்காலத்தில் இந்தியாவில் மட்டும் 2010-11களில் குறுகிய கால மற்றும் நீண்டகால வகுப்புகள், 46 நிறுவனங்களில் நடைபெறும் எனவும், இந்தியாவில் சுமார் 5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அனுமதி அளிக்கவும் முடிவு செய்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் திட்டமான, இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார கூட்டுறவு திட்டத்தின் கிழ் இப்படிப்பு நடத்தப்படுகிறது. இது தொடர்பான விபரங்களுக்கு: www.itec.mea.gov.in
