மருத்துவ படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வுக்கு ஐகோர்ட் தடை
மருத்துவ படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வுக்கு ஐகோர்ட் தடை
UPDATED : ஜன 07, 2011 12:00 AM
ADDED : ஜன 07, 2011 06:10 PM
தமிழக சுகாதாரத் துறைச் செயலர் சுப்புராஜ் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் மருத்துவம், பொறியியல், விவசாயம் உள்ளிட்ட தொழிற் படிப்புகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. நுழைவுத் தேர்வால் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், பெற்றோருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டது.
குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள், சமூகத்தின் அடித்தட்டில் உள்ள மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வால் பாதிப்பு ஏற்பட்டது. நுழைவுத் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டு, பரிந்துரை செய்வதற்காக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, அரசுக்கு பரிந்துரைத்தது.
இதையடுத்து, தொழிற் கல்வியில் மாணவர்களை சேர்ப்பதற்கான புதிய மசோதா, 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டு, சட்டமாக 2007ம் ஆண்டு அமலுக்கு வந்தது. இச்சட்டப்படி, நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தகுதி தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், தொழிற் கல்வியில் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
இச்சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தற்போது, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற் கல்லூரிகளில், நுழைவுத் தேர்வு நடத்தாமல் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. இதுகுறித்து எந்தப் புகாரும் வரவில்லை. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் சிம்ரன் ஜெயின் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், எம்.பி.பி.எஸ்., மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த விதிமுறைகளை வகுப்பதாக, இந்திய மருத்துவ கவுன்சில் பதில் மனு தாக்கல் செய்தது. இவ்வழக்கில் தங்களையும் சேர்க்க வேண்டும் என, தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த மாதம் 21ம் தேதி இந்திய மருத்துவ கவுன்சில், ஒரு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. அதில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் மாணவர்களை சேர்க்க நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என, கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு தெரிவித்த ஆட்சேபங்களை கருத்தில் கொள்ளாமல், இந்த அறிவிப்பாணையை மருத்துவ கவுன்சில் பிறப்பித்துள்ளது.
மருத்துவ கவுன்சில் கொண்டு வந்துள்ள விதிமுறைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை. மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் மருத்துவ கவுன்சில் கொண்டு வந்த விதிமுறைகள் செல்லாது. அறிவிப்பாணையை வாபஸ் பெற மத்திய அரசு உத்தரவிட்டும், மருத்துவ கவுன்சில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அறிவிப்பாணையை பிறப்பிக்க மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரமில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு கல்வி முறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஒரே மாநிலத்தில் கூட பல்வேறு கல்வி முறைகள் உள்ளன. மருத்துவ கவுன்சில் கொண்டு வந்துள்ள புதிய விதிமுறையால், மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே, கடந்த மாதம் 21ம் தேதி இந்திய மருத்துவ கவுன்சில் பிறப்பித்த அறிவிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று, முதுநிலை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாகவும், கடந்த மாதம் 27ம் தேதி மருத்துவ கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பாணையை எதிர்த்து தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இம்மனுக்களை நீதிபதி ஜோதிமணி விசாரித்தார். தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன், சிறப்பு அரசு பிளீடர் சங்கரன் ஆஜராகினர். ‘மருத்துவ கவுன்சில் அறிவிப்பாணையால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது; மருத்துவப் படிப்புக்கான விளக்க குறிப்பேட்டை அரசால் தயாரிக்க முடியவில்லை; எனவே, தடை விதிக்க வேண்டும்’ என, கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன் கோரினார்.
மனுக்களை விசாரித்த நீதிபதி ஜோதிமணி, தமிழகத்தைப் பொறுத்தவரை இந்திய மருத்துவ கவுன்சில் பிறப்பித்த அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்தார்.மனுவுக்குப் பதிலளிக்கும்படி, மத்திய சுகாதாரத் துறை, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
