தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எஸ்.ஆர்.எம்., சாட் இந்த ஆண்டு விண்ணில் ஏவப்படுகிறது

எஸ்.ஆர்.எம்., சாட் இந்த ஆண்டு விண்ணில் ஏவப்படுகிறது

எஸ்.ஆர்.எம்., சாட் இந்த ஆண்டு விண்ணில் ஏவப்படுகிறது


UPDATED : ஜன 08, 2011 12:00 AM

ADDED : ஜன 08, 2011 02:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 08, 2011 12:00 AM ADDED : ஜன 08, 2011 02:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ""எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தின் 35 மாணவர்கள் சேர்ந்து உருவாக்கிய "எஸ்.ஆர்.எம்., சாட்' நானோ செயற்கைக்கோள், இந்த ஆண்டு மத்தியில் இந்தோ - பிரெஞ்ச் செயற்கைக்கோளான "மெகாடிரோபிக்ஸ்' செயற்கைக்கோளுடன் சேர்த்து விண்ணில் ஏவப்படும்,'' என, இஸ்ரோ சிறிய செயற்கைக்கோள்கள் திட்ட இயக்குனர் ராகவமூர்த்தி தெரிவித்தார்.



சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்தில் இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாடு நடந்து வருகிறது. இம்மாநாட்டில் பங்கேற்ற இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்(இஸ்ரோ) சிறிய செயற்கைக்கோள் திட்ட இயக்குனர் ராகவமூர்த்தி கூறியதாவது: கடந்த ஆண்டு பெங்களூரு, ஐதரபாத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 35 மாணவர்கள் இணைந்து உருவாக்கிய, "ஸ்டட்சேட்' என்ற செயற்கைக்கோளை, இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.



அதற்கு முன், அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய, "அனுசாட்' செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. தற்போது ஐ.ஐ.டி., கான்பூர், ஐ.ஐ.டி., மும்பை, இந்திய அறிவியல் தொழில்நுட்பக் கல்வி மையம், சத்யபாமா தனியார் பல்கலைக் கழகம், வி.ஐ.டி., தனியார் பல்கலைக்கழகம் ஆகிய ஐந்து கல்வி மையங்கள், சிறிய செயற்கைக்கோள்களை உருவாக்கி வருகின்றன.



நாடு முழுவதும் பல்வேறு பல்கலைக் கழகங்களிடமிருந்து, சிறிய செயற்கைக்கோள்களை உருவாக்குவதற்காக நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் எங்களுக்கு வருகின்றன. அவற்றை தீவிரமாக ஆய்வு செய்து அனுமதிக்கிறோம். அப்போது, இஸ்ரோ விஞ்ஞானிகள், பல்கலைக் கழகங்களுடன் இணைந்து செயல்படுகின்றனர்.



எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்தின் 35 மாணவர்கள் சேர்ந்து 2008ம் ஆண்டு முதல் "எஸ்.ஆர்.எம்., சாட்' என்ற சிறிய செயற்கைக்கோளை உருவாக்கி வருகின்றனர். பத்து கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், ஒரு கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படுகிறது. விண்வெளியில் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட கிரீன்ஹவுஸ் வாயுக்களை கண்டறிய இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது.



"எஸ்.ஆர்.எம்., சாட்' இந்த ஆண்டு மத்தியில், இந்தோ - பிரெஞ்ச் செயற்கைக்கோளான "மெகாடிரோபிக்ஸ்' செயற்கைக்கோளுடன் சேர்த்து விண்ணில் ஏவப்படும். கடந்த ஆண்டு ஐ.ஐ.டி., கான்பூர் மாணவர்கள், "ஜூக்னு' என்ற நானோ செயற்கைக்கோளை உருவாக்கி இஸ்ரோவிடம் அளித்துள்ளனர்.



புதிய தொழில்நுட்பம் அல்லது கருவிகளை சோதிப்பதற்கும் இத்தகைய சிறிய செயற்கைக்கோள்களை பயன்படுத்த முடியும். அச்சோதனை வெற்றி பெற்ற பிறகு, பெரிய செயற்கைக்கோள்களில், புதிய தொழில்நுட்பம் அல்லது கருவிகளை பயன்படுத்த முடியும். பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட பெரிய செயற்கைக்கோள்களுடன் ஒப்பிடுகையில், சிறிய செயற்கைக்கோள்களின் ஆயுட்காலம் சில மாதங்கள் மட்டுமே. இவ்வாறு ராகவமூர்த்தி கூறினார்.



பறவைகள், "டெக்னிக்': இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குனர் அலெக்ஸ் கூறியதாவது: விண்வெளியில் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள, சிறிய செயற்கைக்கோள்கள் செலவு குறைவான முறையாக விளங்குகின்றன. கடந்த 30 ஆண்டுகளில் 100 கிலோவுக்கும் குறைவான எடை கொண்ட 1,000க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.



தொழில்நுட்பத்தில் புதுமையான அணுகுமுறை மற்றும் குறைந்த செலவின் காரணமாக, சிறிய செயற்கைக்கோள்கள் உதவியுடன் விஞ்ஞானிகள் தங்களது ஆராய்ச்சியில் துணிந்து ஈடுபட முடிகிறது. விண்வெளியில் பல்வேறு அணிவகுப்பு முறையில் சுற்றி வரும் வகையில், செயற்கைக்கோள்களை கூட்டமாக அனுப்பும் சாத்தியக்கூறுகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பறவைகள் கூட்டம் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாமல் கூட்டமாக பறப்பதிலிருந்து இந்த யோசனை உருவாகியுள்ளது. இவ்வாறு அலெக்ஸ் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us