இந்திய மருத்துவக் கவுன்சிலை கலைக்க மத்திய அரசு திட்டம்
இந்திய மருத்துவக் கவுன்சிலை கலைக்க மத்திய அரசு திட்டம்
UPDATED : ஜன 08, 2011 12:00 AM
ADDED : ஜன 08, 2011 03:44 PM
இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1933ன் படி உருவாக்கப்பட்டது இந்திய மருத்துவக் கவுன்சில்(எம்.சி.ஐ.,) அமைப்பு. நாடு முழுவதும் சீரான, தரமான மருத்துவக் கல்வியை உருவாக்குவதற்காக கொண்டு வரப்பட்ட இந்த அமைப்பு 76 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு இதன் தலைவராக இருந்த கேதன் தேசாய், பஞ்சாப் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்க இரண்டு கோடி ரூபாய் பணம் பெற்றதற்காக சி.பி.ஐ., அவரை கடந்த ஏப்ரல் 22ம் தேதி கைது செய்தது.
இந்திய மருத்துவக் கவுன்சிலில் அதிகமாக ஊழல் கறை படிந்ததால், அந்த அமைப்பு கலைக்கப்பட்டு, மருத்துவக் கவுன்சிலை நிர்வகிக்க, டாக்டர் ஷரின் தலைமையிலான ஆறு டாக்டர்கள் அடங்கிய குழு கடந்த மே மாதம் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் ஒப்புதலுடன் அமைக்கப்பட்டது. கடந்த மாதம் 21ம் தேதி இக்குழு கொண்டு வந்த அதிரடி உத்தரவு, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எம்.பி.பி.எஸ்., மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர, இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்தும் தேசிய நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம்’ என, இந்த அமைப்பு உத்தரவிட்டது. நுழைவுத்தேர்வை முழுமையாக ரத்து செய்துள்ள தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
தமிழக அரசு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, இந்திய மருத்துவக் கவுன்சில் முடிவுக்கு இடைக்கால தடை பெறப்பட்டது. நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதால், மத்திய சுகாதாரத்துறை, இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியது.
‘இந்திய மருத்துவக் கவுன்சில் எந்த புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்தாலும், மத்திய அரசின் முன்அனுமதி பெறுதல் அவசியம். ஆனால், மத்திய அரசின் முன்அனுமதி பெற்று விட்டதாகக் கூறி, நுழைவுத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சில் திருத்தச் சட்டம் விதி 33ன் கீழ், மருத்துவக் கவுன்சில் எடுத்த முடிவு செல்லாது. எனவே, நுழைவுத்தேர்வு முடிவை உடனே வாபஸ் பெற்று அதை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்’ என, கடந்த 3ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவு பிறப்பித்து நான்கு நாட்களுக்கு மேல் ஆகியும், நுழைவுத்தேர்வு அறிவிப்பை வாபஸ் பெற இந்திய மருத்துவக் கவுன்சில் மறுத்து விட்டது. மத்திய அரசின் அனுமதியின்றி, மேலும் பல உத்தரவுகளை இந்திய மருத்துவக் கவுன்சில் பிறப்பித்துள்ளது தற்போது மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
எனவே, கவுன்சில் அமைக்கப்பட்டபோது குறிப்பிடப்பட்ட விதிகளை மருத்துவக் கவுன்சில் நிர்வாகக் குழு பின்பற்றாமல் தன்னிச்சையாக செயல்படுவது சட்ட விரோதம். விதிகளை தவறாக பயன்படுத்தியதற்காகவும், இந்திய மருத்துவக் கவுன்சிலின் தற்போதைய நிர்வாகக் குழுவை கலைப்பது என மத்திய சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது. இதுகுறித்த கோப்பு தயாரிக்கப்பட்ட மத்திய சுகாதாரத்துறை செயலர் சந்திரமவுலிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோப்பு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, எந்த நேரமும் இந்திய மருத்துவக் கவுன்சில் கலைக்கப்படலாம் என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
35 ஆயிரம் இடங்கள்: நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 35 ஆயிரம் எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. மாணவர் சேர்க்கைக்கு பெரும் பணம் புரளும் துறை என்பதால், மாணவர் சேர்க்கைக்கான அதிகாரம் ஒரு இடத்தில் குவியக் கூடாது என்ற கருத்தும் நிலவுகிறது.
இவ்வளவு இடங்களையும் நிரப்பும் சர்வ வல்லமை படைத்த அமைப்பாக இந்திய மருத்துவக் கவுன்சில் உருவானால், அங்கு ஊழல் தலைதூக்கும் என்பதாலும் அந்த முடிவை மத்திய அரசு எதிர்ப்பதாக கூறப்படுகிறது.
ஆறு டாக்டர்கள் நிர்வாகக் குழு: இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்வாகக் குழு விவரம்:
1. டாக்டர் எஸ்.கே.ஷரீன் (தலைவர்)
2. ரஞ்சித் ராய் சவுத்ரி
3. சீதா நாயக்
4. கவுதம் சென்
5. தேவி ஷெட்டி
6. ஆர்.எல்.சல்ஹான
ஐதராபாத்தில் முக்கிய முடிவு: தற்போதைய இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்வாகக் குழு கலைக்கப்பட்டு, புதிய குழு நியமிக்கப்பட உள்ளது. இதுபற்றி விவாதிக்கவும், தேசிய நுழைவுத்தேர்வு குறித்து விவாதிக்கவும் வரும் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஐதராபாத்தில் மத்திய சுகாதாரத் துறை சார்பில் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 11ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனர்கள் பங்கேற்று ஆலோசனை தெரிவிக்கின்றனர்.
வரும் 12, 13ம் தேதிகளில் மருத்துவத்துறை செயலர்கள் மற்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர். அடுத்தகட்டமாக இறுதி முடிவெடுக்க வரும் 16, 17ம் தேதிகளில் மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அதில், சுகாதாரத்துறை, சட்டத்துறை செயலர்கள் பங்கேற்று இறுதி முடிவுகளை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
