தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளை துவங்க ஆந்திர அரசு திட்டம்

எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளை துவங்க ஆந்திர அரசு திட்டம்

எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளை துவங்க ஆந்திர அரசு திட்டம்


UPDATED : ஜன 10, 2011 12:00 AM

ADDED : ஜன 10, 2011 12:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 10, 2011 12:00 AM ADDED : ஜன 10, 2011 12:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஐதராபாத்: ஆந்திராவிலுள்ள அரசு பள்ளிக் கூடங்களில் வரும், கல்வியாண்டு முதல் எல்.கே.ஜி., - யூ.கே.ஜி., வகுப்புகளை கொண்ட மழலையர் பள்ளிக் கூடங்களை திறக்க, அம்மாநில பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.


எல்.கே.ஜி., - யூ.கே.ஜி., ஆகிய வகுப்புகள் கொண்ட மழலையர் பள்ளிக் கூடங்களை, பெரும்பாலும் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. அதே வேளை, அரசு சார்பில் அங்கன்வாடி என்றழைக்கப்படும் மழலையர் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், தனியார் மழலையர் பள்ளிக் கூடங்களுக்கு உள்ள வரவேற்பு அங்கன்வாடிகளுக்கு இல்லை. இதைக் கருத்தில் கொண்டு, அரசு பள்ளிக் கூடங்களில் எல்.கே.ஜி., - யூ.கே.ஜி., வகுப்புகளை கொண்ட மழலையர் பள்ளிகளை திறக்க, ஆந்திர பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தனியார் பள்ளிக் கூடங்கள் போன்று அரசு பள்ளிக் கூடங்களிலும், எல்.கே.ஜி., மற்றும் யூ.கே.ஜி., வகுப்புகளை கொண்ட மழலையர் பள்ளிக் கூடங்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் மூன்று வயது நிரம்பிய குழந்தைகள் எல்.கே.ஜி., வகுப்பில் சேர்க்கப்படுவர். இதற்கான நடவடிக்கைகள் துரிதமாக நடந்து வருகின்றன. இத்திட்டத்திற்கு, தலைமை செயலர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து, இத்திட்டத்திற்கான முன் வரைவு அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


அரசின் அனுமதி கிடைத்தவுடன், மழலையர் பள்ளிகளை திறப்பதற்கான பணிகள் துவங்கப்படும். இத்திட்டத்தின் மூலம், ஏழை குழந்தைகள் தரமான அடிப்படை கல்வியை பெற முடியும். மேலும், குழந்தை தொழிலாளர் மற்றும் மாணவர்கள் கல்வி இடை நின்றலை தவிர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே, மழலையர் பள்ளிகள் திறப்பதற்கான திட்டத்திற்கு, அம்மாநில ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


இது குறித்து ஆந்திரபிரதேச டீச்சர்ஸ் பெடரேசன் (ஏ.பி.டி.எப்.,) அமைப்பை சேர்ந்த கிஷோர் நேட்டா கூறியதாவது: அரசு பள்ளிக் கூடங்களில் மழலையர் வகுப்புகளை திறப்பதற்கு, போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. தற்போதுள்ள பள்ளிக் கட்டடங்களை பராமரிப்பதற்கே அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. இந்த நிலையில், மழலையர் வகுப்புகளை துவங்குவது பொருத்த மற்ற செயல்.


மேலும், தற்போதுள்ள ஆசிரியர்களை கொண்டு, மழலையர் பள்ளிகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.இதனால், அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டு, கல்வித் தரம் பாதிக்கப்படும். எனவே, இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு கிஷோர் நேட்டா கூறினார்.


 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us