UPDATED : ஜன 11, 2011 12:00 AM
ADDED : ஜன 11, 2011 04:49 PM
தேசிய அளவில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில், 41.40 சதவீதம் பேர் மாணவியர் என தெரிய வந்துள்ளது.
மேலும், உயர்கல்வி பயிலும் மாணவியரில் 69.07 சதவீதம் பேர் கலை, அறிவியல் படிப்புகளிலேயே சேர்ந்துள்ளனர். நாட்டில் பெண்களின் கல்வி நிலை குறித்த அறிக்கையை, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கை, பெண்களின் கல்வியை உயர்த்துவதற்காக, மத்திய அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்து எடுத்துரைப்பதுடன், நாட்டில் பெண்கள் கல்வி எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்:
நாட்டின் மக்கள் தொகையில் 48 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பெண்கள். 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 102 கோடியே 87 லட்சத்து 37 ஆயிரத்து 436. இதில், ஆண்கள் 53 கோடியே 22 லட்சத்து 23 ஆயிரத்து 090 (51.74%); பெண்கள் 49 கோடியே 65 லட்சத்து 14 ஆயிரத்து 346 (48.26%).
நாட்டில் ஆரம்பக் கல்வி இலவசமாக வழங்கப்பட்டாலும், கல்விக் கட்டணம் தவிர, புத்தகங்கள், சீருடை, எழுதுப் பொருட்கள் ஆகியவற்றுக்கான செலவு, பெண்கள் கல்வியறிவு பெறுவதற்கு தடையாக உள்ளது. பள்ளிகளிலும் பெண்களுக்கென தனி கழிவறை இல்லாதது, பெண் ஆசிரியர்கள் இல்லாதது, மாணவியரின் பாதுகாப்பு குறித்த தொடர் அச்சம் ஆகியவையும் மாணவியரின் கல்விக்கு தடையை ஏற்படுத்துகின்றன.
முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது உயர் கல்வியில் பெண்களின் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது. சுதந்திரம் பெற்ற போது, மொத்த மாணவர் சேர்க்கையில் 10 சதவீதம் பேர் மட்டுமே மாணவியர். கடந்த 2009 - 10ம் ஆண்டில் மொத்த மாணவர் சேர்க்கையில் 41.40 சதவீதம் பேர் மட்டுமே மாணவியர். மொத்த மாணவர் சேர்க்கையில், மாணவியரின் சதவீதம் கோவாவில் (59%) தான் அதிகமாக உள்ளது. இது பீகாரில் (30%) மிகக் குறைவாக உள்ளது. எண்ணிக்கை அடிப்படையில், உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக எட்டு லட்சம் மாணவியர் உயர் கல்வியில் சேர்ந்துள்ளனர். அதற்கடுத்தபடியாக, மகாராஷ்டிராவில், ஏழு லட்சத்து 80 ஆயிரம் மாணவியர் உயர் கல்வியில் சேர்ந்துள்ளனர்.
உயர் கல்வியில் மாணவியர் எந்தெந்த பாடப் பிரிவுகளில் சேர்ந்துள்ளனர் என்ற விவரத்தை பார்க்கும் போது, 2009 - 10ம் ஆண்டு உயர் கல்வியில் சேர்ந்த மாணவியரில், 49.08 சதவீதம் பேர் கலைப் படிப்பிலும், 19.99 சதவீதம் பேர் அறிவியல் படிப்பிலும், 16.21 சதவீதம் பேர் வர்த்தகம் / மேலாண்மை படிப்பிலும், 3.20 சதவீதம் பேர் கல்வியியல் படிப்பிலும், 4.90 சதவீதம் பேர் பொறியியல் / தொழில் நுட்பப் படிப்பிலும், 3.59 சதவீதம் பேர் மருத்துவப் படிப்பிலும், 0.27 சதவீதம் பேர் விவசாயப் படிப்பிலும், 0.08 சதவீதம் பேர் கால்நடை மருத்துவப் படிப்பிலும், 1.58 சதவீதம் பேர் சட்டப் படிப்பிலும், 1.10 சதவீதம் பேர் இதர படிப்புகளிலும் சேர்ந்துள்ளனர்.
மகளிர் கல்லூரிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. 2000 - 01ம் ஆண்டில் 1,587 ஆக இருந்த மகளிர் கல்லூரிகளின் எண்ணிக்கை, 2008 - 09ம் ஆண்டில் 2,565 ஆக உயர்ந்துள்ளது.
