UPDATED : ஜன 12, 2011 12:00 AM
ADDED : ஜன 12, 2011 01:03 PM
கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் 3 சதவீத அருந்ததியர் உள்ஒதுக்கீடு முடிவு சரியானதே என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டுள்ளது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அருந்ததியருக்கான 3 சதவீத உள்ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அம்மனுவில், நாட்டின் பாராளுமன்றம் மட்டுமே எஸ்.சி/எஸ்.டி, ஓ.பி.சி., எப்.சி. போன்ற ஜாதி பிரிவுகளிலிருந்து ஒரு ஜாதியை சேர்க்கவோ அல்லது நீக்கவோ முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து, நீதிபதி பால் வசந்தகுமார், நீதிபதி ஆர். சுப்பையா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு வாதிட்ட தமிழக அரசின் அட்வொகேட் ஜெனரல் பி.எஸ். ராமன், "மாநில அரசு எஸ்.சி. பட்டியலிலிருந்து எந்த ஜாதியையும் விலக்கவுமில்லை, சேர்க்கவுமில்லை. மாறாக அப்பட்டியலிலுள்ள ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு மொத்த ஒதுக்கீடான 18 சதவீதத்தில் 3 சதவீதத்தை உள்ஒதுக்கீடாகத்தான் வழங்கியுள்ளது. இது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டதுதான் . அந்த 3 சதவீத ஒதுக்கீட்டை நிரப்பும் அளவில் அருந்ததியர் சமூகத்தில் தகுதியான ஆட்கள் இல்லையெனில், அந்த இடங்கள் தானாகவே மற்ற எஸ்.சி. பிரிவினருக்கு சென்றுவிடும்" என்று வாதிட்டார்.
இதன்மூலம் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை தமிழக அரசு உறுதிபடுத்தியுள்ளது.
